Aran Sei

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவுவதாகத் திமுக அறிவித்தது அரசியல் நாடகம் – எடப்பாடி

Image Credits: New Indian Express

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு உதவுவதாகத் திமுக அறிவித்தது அரசியல் நாடகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தைத் தமிழக அரசு இயற்றியது. அதன்படி, இந்தாண்டே, மொத்தம் 313 மருத்துவ (எம்பிபிஎஸ்) இடங்களிலும், 92 பல் மருத்துவ (பிடிஎஸ்) இடங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்குக் கவுன்சிலிங் நடந்தது” என்று கூறியுள்ளார்.

“அரசுப் பள்ளி மாணவர்களின் ஏழ்மை மற்றும் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குக் கல்வி மற்றும் இதர செலவினங்களை செலுத்துவதாக 18-ம் தேதி நடந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை உத்தரவு வழங்கும் விழாவில் அறிவித்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அரசின் உதவி முழுமையாகக் கிடைக்கும் எனத் தெரிந்த பின்பும், திமுக, உதவுவதாக அறிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகம்” எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக திமுக தலைவர்  ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டின் படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்களால் கட்டணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

“மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள திமுக, தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை முழுமையாக ஏற்கும். திமுக ஆட்சியில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, பின் தங்கிய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களின் மருத்துவக் கனவும் நினைவாகும்” என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்