Aran Sei

விடுதலையாகிறார் பேரறிவாளன்? – பிரதமர், குடியரசுத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆலோசனை

credits : the newindian express

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பினை தமிழக ஆளுநரிடம் வழங்கியது. ஆளுநரின் முடிவைத் தொடர்ந்து 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள்.

இந்த விவகாரத்தில் ஆளுநர், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் போன்ற எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே சமயம், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் எழுவரின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

இந்நிலையில் பேரறிவாளன் கருணை மனு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “பல்துறை கண்காணிப்பு நிறுவனத்தின் (எம்டிஎம்ஏ)  இறுதி அறிக்கைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எம்டிஎம்ஏ இறுதி அறிக்கைக்காகக் காத்திருப்பதாக ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது,” என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், புதன்கிழமையன்று திடீர் பயணமாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுள்ளார். இதைதொடர்ந்து, தமிழகத்தில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகள் குறித்து முடிவெடுப்பதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.

குடியசுத் துணைத் தலைவர், உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை அவர்களின் இல்லத்தில் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் சந்தித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் 20 நிமிடங்களுக்கு மேல் உரையாடிக் கொண்டிருந்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் அவர் சந்திக்க இருக்கிறார். அதன் பிறகு நவம்பர் 6-ம் தேதி அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 1991-ல் பேரறிவாளனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. வெடி குண்டில் பயன்படுத்தப்பட்ட 9 வோல்ட் பேட்டரியை வாங்கிக் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

20 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், 2014-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், உச்ச நீதிமன்றம் பேரறிவாளனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்