Aran Sei

சேலம் எட்டுவழிச்சாலை : ‘ ரத்து செய்ய சட்டசபை தீர்மானம் வேண்டும் ‘ – விவசாயிகள்

சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார். அதில், “சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று விவசாயிகள் தொடர்ந்துபோராடி வருகின்றனர். இந்தத் திட்டத்திற்கு நிலங்களை கொடுக்க விரும்பவில்லை என்பதை அரசுக்கு பலவிதங்களில் விவசாயிகள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோவதைப் பற்றிக் கவலைப்படாமல் விவசாயிகளின் விருப்பத்திற்கு விரோதமாக சாலை அமைத்தே தீருவோம் என்று பிடிவாதமாக இருந்து வருகிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை தொடரும் – உச்ச நீதிமன்றம்

அதனை உறுதி செய்யும் வகையில் மத்திய நிதியமைச்சர் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான பணி இந்த ஆண்டே துவங்கப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனவளம், இயற்கை வளங்களை அழித்தும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களாக விளங்கும் பத்தாயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்களை அழித்து எட்டுவழிச்சாலை அமைப்பது ஏற்புடையதல்ல என்று சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே உள்ள சாலைகளை விரிவுபடுத்த வாய்ப்பிருந்தும் அதை மறுத்து விவசாயிகளின் நிலத்தை பறித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மத்திய – மாநில அரசுகள் செயல்படுவதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் உரை – ” அதிமுகவின் இரட்டை வேடம்; காவு கொடுக்கப்படும் மாநில உரிமைகள் “

தமிழக அரசு விவசாயிகளின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் கணக்கில் கொண்டு சேலம் – சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 11-ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்திட எட்டுவழிச்சாலை எதிர்ப்பியக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது என்பதை சண்முகம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்..

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்