மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாக்கள் விதிமீறல் ஏதுமின்றி உரிய முறையிலேயே நிறைவேற்றப்பட்டதாக துணை அவைத்தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்துள்ளார்.
அவையில் ஒழுங்குமுறை பின்பற்றப்படாததால் எதிர்க்கட்சிகள் முன்வைத்த டிவிஷன் முறை வாக்கெடுப்பினை நடத்த முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியதை அடுத்து குடியரசு தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
டிவிஷன் முறை வாக்கெடுப்பு நடத்த வேண்டும், மசோதாக்களை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மசோதாக்களை நிறைவேற்றுவதில் துணை அவைத்தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டதாக அவர்மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கொடுத்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
குரல் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கையில் இல்லாததால் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தவில்லை என ஹரிவன்ஷ் கூறியிருந்தார்.
ராஜ்யசபா டிவியின் பதிவுகளில் டிவிஷன் வாக்கெடுப்பு கேட்டிருந்த திருச்சி சிவா மற்றும் கே.கே,ராகேஷ் அவரவர் இருக்கையில் இருப்பது தெரிகிறது.
Damning exposé by the Indian Express.
RSTV footage nails the lies of the Deputy Chairman that members asking for division weren’t in their seats. The MPs who asked for division WERE IN THEIR SEATS.
The vote on the Farm Bills was purely illegal. https://t.co/tJVfRkJPqY
— Saket Gokhale (@SaketGokhale) September 27, 2020
இதுகுறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது ஹரிவன்ஷ், “விதிமுறைகளின்படி, டிவிஷன் வாக்கெடுப்புக்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று, டிவிஷன் வாக்கெடுப்பு கோரப்பட வேண்டும். இரண்டாவதாக அவையில் ஒழுங்குமுறை நிலவ வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் அரண்செய்-க்கு அளித்த பேட்டியில்;
”மசோதாக்களின் வாக்கெடுப்பின்போது எம்.பி திருச்சி சிவா அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில்தான் இருந்தார். கட்சி தலைவர் கரீம் எளமாரம் கரீம் அறிவுறுத்தல்படி கேலரியில் அமர்ந்திருந்த கே.கே.ராகேஷ் கீழ் தளத்துக்கு வந்து அமர்ந்திருந்தார்.” என்றார்.
தொடர்ந்து, ”கொரோனா சூழலால் இருக்கைகள் மூன்று வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. அந்தந்த கட்சியின் நாடாளுமன்ற தலைவர்கள்தான் உறுப்பினர்களுக்கு இருக்கைகளை முடிவுசெய்து ஒதுக்குவார்கள்.
என்னுடைய இருக்கை மக்களவையில் இருந்தது. கை உயர்த்தச் சொல்லி வாக்கெடுப்பு நடத்தப்பட்ட சமயங்களில் மக்களவையில் இருந்த உறுப்பினர்கள் கண்டுகொள்ளப்படவே இல்லை.” எனவும் கூறினார்.
மேலும் ”அவையில் ஒழுங்குமுறையை உறுதிப்படுத்த வேண்டியது அவைத்தலைவரின் கடமை. அவையைக் கட்டுப்பாட்டுடன் நடத்தவேண்டிய பொறுப்பு முழுக்க அவைத்தலைவருடையது மட்டுமே. அதுகுறித்து உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது.” என்றார்.
விவசாய மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட முறை முற்றிலும் ஜனநாயகத்துக்கு புறம்பானது என திமுக எம்.பி.சண்முகம் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.