Aran Sei

உயர் சாதியினருக்காக பறிக்கப்படும் OBC,SC,ST பிரிவினரின் இடஒதுக்கீடு

Credits: Twitter

வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) இந்திய வங்கி, பஞ்சாப் வங்கி, மகாராஷ்டிர வங்கி உள்ளிட்ட தேசிய வங்கியில் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களின் தேர்வுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிக்கையில், பட்டியல் சாதியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு குறைக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10% இடஒதுக்கீட்டு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

2019-ம் ஆண்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்காக தனியாக இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்தது. இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீட்டை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது.

ஆனால் தற்போது வெளியிட்டுள்ள தேர்வு அறிவிக்கைப்படி, எஸ்சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 15 சதவீதத்திலிருந்து 13% என்றும், எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 7.5 சதவீதத்திலிருந்து 6% எனவும் குறைக்கப்பட்டுள்ளன.

27% என இருந்த இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு 21%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 142 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து பிடுங்கப்பட்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு எஸ்பிஐ வங்கி, காலி பணியிடங்களை நிரப்பும்போது, ஏற்கனவே இருந்த எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீட்டை குறைக்காமல், பொதுப் பிரிவில் இருந்து 10% பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு என ஒதுக்கி இருந்தது.

ஆனால் தற்போது வெளியிட்டுள்ள அறிவிக்கையில் பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு மாற்றம் செய்யப்படாமல் 50% என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 1417 காலிப் பணியிடங்களில் பொதுப் பிரிவினருக்கு 690 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.சந்துரு, “மத்திய அரசு யுபிஎஸ்சி தேர்வாணையத்துக்கு தெளிவாகவே அறிவுறுத்தியிருந்தது. இருந்தபோதிலும், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இடஒதுக்கீட்டைக் குறைத்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் இடஒதுக்கீட்டுக்கு கொடுத்திருப்பது அரசியலமைப்பின் அப்பட்டமான மீறல்.” என்று குற்றம் சாட்டியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 3, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டுள்ள நிலையில், முதல்நிலைத் தேர்வு முடிவுகளைப் பொறுத்து முதன்மைத் தேர்வும் நேர்காணலும் நடத்தப்படும் என தேர்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்