Aran Sei

பட்டாசுக்குத் தடை – ராஜஸ்தான், ஒடிசா முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் கடிதம்

Image Credit - thehindu.com

ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களும், மும்பை பெருநகரமும் பட்டாசுகளை விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதித்துள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜஸ்தான், ஒடிசா மாநில முதல்வர்களுக்குத் தடையை மறுபரிசீலனை செய்யும்படி கடிதம் எழுதியுள்ளார்.

பொதுச் சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கணக்கில் கொண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை பட்டாசுகளை வெடிப்பதற்குத் தடை விதிக்கும் படி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்குத் திங்கள்கிழமையன்று நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

“மக்களின் உயிரைப் பாதுகாப்பது அரசுக்கு முதன்மையானது” என்று கூறி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட் பட்டாசுகள் வெடிக்கத் தடையை அறிவித்துள்ளார். “தீபாவளியின் போது பட்டாசுகளை வெடிப்பதைத் மக்கள் தவிர்க்க வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த மாதம் 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பட்டாசுகள் விற்பதையும் பயன்படுத்தப்படுவதையும் ஒடிசா அரசு தடைசெய்துள்ளது. “கொரோனா நோய்த்தொற்று நிலைமையில் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் தீய விளைவுகளையும் வரவிருக்கும் குளிர் காலத்தையும் கருத்தில் கொண்டு, நவம்பர் 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பட்டாசுகள் விற்பதையும் பயன்படுத்தப்படுவதையும் மாநில அரசு தடை செய்கிறது” என்று ஒடிசா அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் காளி பூஜையின் போதும் தீபாவளியின் போதும் பட்டாசுகளை வெடிப்பதை அனுமதிக்கப் போவதில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அவை கொரோனா நோயாளிகளுக்கு அபாயகரமானவை என்று காரணம் தெரிவித்துள்ளது.

டெல்லி மாநில அரசு பட்டாசு வெடிப்பதைத் தடை செய்வதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. மும்பை மாநகராட்சி தீபாவளி நாட்களில் மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதற்குத் தடை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்குக் காங்கிரஸ் தமிழ்நாடு கிளைத் தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம் எழுதியுள்ளார். அதில் “பட்டாசு விற்பனையைத் தடை செய்தால் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், சரக்குப் போக்குவரத்து மேற்கொள்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதைக் கருத்தில் கொண்டு “அனைத்துப் பட்டாசுகள் விற்பனைக்கும் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தடைக்கு விலக்கு அளிக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு சிவகாசியில் தயாரிக்கப்படும் பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.” என்று அவர் எழுதியுள்ளார்.

இந்நிலையில், பட்டாசு தடையை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தமிழகத்தில் பசுமைப் பட்டாசுகளை தீபாவளியன்று காலையில் 1 மணி நேரம், மாலையில் 1 மணி நேரம் மட்டும் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றும், “உங்களது மாநிலத்தில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் தமிழ்நாட்டின் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், விற்பனையில் ஈடுபட்ட நபர்களும் சிக்கல்களை எதிர்கொள்வார்கள்” என்றும் கூறியுள்ளார்.

“இவற்றைக் கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்கும், அதனை வெடிப்பதற்கும் தங்களது அரசுகள் விதித்துள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்