Aran Sei

`புறநகர் ரயில் சேவைகளைத் தொடங்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கையில், மாநிலங்களுக்குள்ளேயும் மாநிலங்களுக்கு இடையிலும் சிறப்பு ரயில்களை மட்டும் இயக்க, மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் சென்னை மெட்ரோ ரயில்களும் இயங்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில், சென்னையில் புற நகர் ரெயில் சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பொருளாதார நடவடிக்கைகளை மீட்டெடுக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை உட்பட பொது போக்குவரத்து சேவைகளை தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது. புறநகர் ரயில் சேவையைத் தொடங்குவதன் மூலம் பொதுமக்களுக்குப் பேருதவியாக இருப்பதோடு, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் புறநகர் ரயில் சேவை பெரிதும் உதவும் என்று அதில் கூறியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு முதல்வர் எழுதிய கடிதம்

மேலும், இதை வழியுறுத்தி தமிழக அரசு சார்பில் அக்டோபர் 2- ம் தேதி கடிதம் எழுதியுள்ளதையும் முதல்வர் இதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று புறநகர் மின்சார ரயில்களை இயக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக அரசின் சார்பில் செப்டம்பர் இரண்டாம் தேதியே சென்னையில் புறநகர் மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கி தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் ரயில்வே அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதியிருப்பதாக முதல்வரின் அறிக்கை கூறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

”அப்படி இருக்க ரயில்வே அமைச்சகம் இன்னமும் மின்சாரப் புறநகர ரயில்களை இயக்க அனுமதி வழங்காதது ஆச்சரியமளிக்கிறது. மற்ற ரயில்களை இயக்க அனுமதி மறுத்து வந்தது மாநில அரசுதான். மாநில அரசு அனுமதிக்காததால்தான் நாங்கள் ரயில் ஓட்டவில்லை என்று ரயில்வே அமைச்சகம் முன்பு கூறியது. ஆனால் மாநில அரசு அனுமதி அளித்த பின்பும் இரண்டு மாதங்களாக ரயில்வே அமைச்சகம் இதன் மீது முடிவு எடுக்காதது ஏன் என்று மக்களுக்கு ரயில்வே அமைச்சகம் விளக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

“எனக்குக் கிடைத்த தகவலின் படி ரயில்வே அமைச்சகம் எப்போது மற்ற பயணி சிறப்பு வண்டிகளில் முன்பதிவில்லா பொதுப் பெட்டிகளை இணைக்கிறோமோ அப்போதுதான் புறநகர ரயில்களை ஓட்ட முடியும் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது மாநில அரசுதான். மாநில அரசே அனுமதி வழங்கியபின் இதை முடிவெடுக்காமல் புறக்கணிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.” என்கிறார்.

”ஏற்கனவே மக்கள் தங்கள் வேலை இடங்களுக்கு வந்து செல்ல நெருக்கடியான பேருந்துகளையும் அல்லது அதிக கட்டணம் கொடுத்து தனியார் வண்டிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். தொழிலகங்களும் அலுவலகங்களும் 100 சதம் திறந்த பிறகு இன்னமும் அவர்களின் பொது போக்குவரத்தை நிறுத்தி வைத்திருப்பது கேள்விக்குரியதாகும்.ரயில்வே அமைச்சகம் இப்போது நடந்து கொள்வதை வைத்துப் பார்த்தால் லாபமீட்டும் வண்டிகளை மட்டும் இயக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “புறநகர் ரயில்கள் வெகு மக்கள் பயன்பாட்டு ரயில்கள் ஆகும்.  தேச நலனின் அடிப்படையில் பார்த்து இந்த வண்டிகளை ஓட்டவேண்டும். மும்பைப் புறநகர ரயில்களை அதிகம் ஓட்டிட அனுமதி வழங்கப்படுவதாக தெரிகிறது. ரயில்வே அமைச்சகம் மக்கள் நலனில் அக்கறை கொண்டு புறநகர் மின்சார ரயில்களை இயக்குவதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்