Aran Sei

தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல் – பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு

டிசம்பர்  22 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதிகளில், இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று  இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டில் இருந்து, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான துறைசார் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து ஐந்து முறை நடந்துள்ளன.

இராமேஸ்வரம், சென்னை மற்றும் இலங்கைத் தலைநகர் கொழும்புவிலும், இருநாட்டு அரசு அதிகாரிகள் ஏற்பாட்டில், ஐந்துமுறை நடந்த பேச்சுவார்த்தையில், இருநாட்டு மீனவர்களுக்கிடையே சுமுக முடிவு ஏற்படாததால் தோல்வியில் முடிந்தன.

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

சமீப காலங்களாக, தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகுகள் சேதப்படுத்தப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், வரும் டிசம்பர் 22 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதிகளில், மீண்டும் இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

இதுகுறித்து, தங்கச்சிமடம் மீனவச் சங்கத் தலைவர் எமரெட்டிடம் அரண்செய் பேசிய போது, இந்தப் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை வரவேற்பதாகவும், “இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில், இந்திய அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் எண்ணத்தோடு, மீனவர்களிடம் கலந்தாலோசித்து அதில் பங்கேற்கவில்லை. அதனால் அவை தோல்வியுற்றது. இந்த முறையும் அப்படி நடக்கக் கூடாது.” என்றும் கூறினார்.

”1974-ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட போது, கையெழுத்திடபட்ட ஒப்பந்தத்தில் இருநாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பதற்கான உரிமையை வழங்குவதாக அதில் ஒருவரி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த வரியை இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் நீக்கிவிட்டார்கள்.” என்று குற்றஞ்சாட்டினார்.

`பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு

இந்தப் பேச்சுவார்த்தையில் வைக்கப்பட உள்ள கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு, “எங்களுக்குக் கச்சத்தீவு வேண்டாம். எங்கள் பாரம்பரிய இடத்தில் மீன் பிடிப்பதற்கான உரிமையைக் கேட்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இராமேஸ்வரம் பகுதி மீனவச் சங்கங்கள் மட்டுமல்லாது, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர் போன்ற மற்ற தமிழகப் பகுதிகளில் இருந்து, இலங்கை எல்லைப் பகுதியில் மீன் பிடித் தொழில்நடத்தும் மீனவர்களின் சங்கங்களும் பங்கேற்கவுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்