பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான திமுக மகளிரணியின் போராட்டத்தைத் தடுக்கும் அளவுக்கு தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 10) பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு எதிராக போரட்டம் நடத்தவும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவும் சென்ற திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, பொள்ளாச்சிக்கு செல்லும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து கனிமொழி சாலை மறியலில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு – போராட்டம் நடத்தச் சென்ற கனிமொழியை தடுத்து நிறுத்திய காவல்துறை
இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ”நான் இபிஎஸ் அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டு வழியில் நிறுத்தப்பட்டுள்ளேன். இந்த கொடூரமான குற்றத்தை திட்டமிட்டு மூடிமறைத்தது வெளிவந்துவிடும் என (அதிமுக) மூத்த தலைவர்கள் அச்சமடைந்துள்ளார்களா? அவர்கள் நிரபராதிகள் என்றால் அரசு ஏன் பயப்படுகிறது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று (ஜனவரி 10) திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், சென்னை ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற மக்கள் வார்டு சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அப்போது இதுகுறித்து பேசிய அவர், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில், இப்பொழுது 4 நாட்களுக்கு முன்னாள் சி.பி.ஐ. 3 பேரைக் கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர் யார் என்றால், அதிமுகவைச் சேர்ந்த மாணவரணிச் செயலாளராகப் பொறுப்பில் இருப்பவர். கட்சிப் பொறுப்பில் மட்டுமல்ல, அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் வேண்டியவர். தோள் மேல் கை போட்டுக் கொண்டு எடுத்த புகைப்படம் எல்லாம் வெளியே வந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
“இப்படிப்பட்ட நிலையில் விசாரணை விரைவுபடுத்த வேண்டும், வேகப்படுத்த வேண்டும், வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் என்று முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கி போராட்டத்தை நடத்துவதற்காக, கனிமொழி காரில் புறப்பட்டுச் சென்றார்.”
“அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்து, அந்தக் கூட்டத்திற்குப் போகும்போது காவல்துறையினர் தடுத்து விட்டார்கள். அதுமட்டுமின்றி, அதில் கலந்து கொள்வதற்காகப் பல இடங்களிலிருந்து நிறைய மகளிர் வந்திருந்தனர். அவர்களை எல்லாம் வரக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.” என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோயிலுக்குச் சென்றவரைப் பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி: தலைமறைவானவரை கைது செய்தது காவல்துறை
“அவ்வாறு போராட்டம் நடந்தால், அதிமுக. அரசின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் அல்லவா? அதற்காகத் திட்டமிட்டு இதைத் தடுக்க முயன்றார்கள். அந்தத் தடையை மீறிச் சென்று விட்டார். அப்பொழுதும் விடவில்லை.”
“அதற்குப் பிறகு நான் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை அழைத்து, டிஜ.பியிடம் பேசச் சொன்னேன். ‘அனுமதி வழங்கவில்லை என்றால், நாளை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மகளிரைத் திரட்டி எல்லா இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவித்தேன். அதுவும் நானே அந்தப் போராட்டத்திற்குச் செல்வேன்’ என்று கூறினேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விஷயத்தை தொலைபேசியது “ஏனென்றால் அப்போதுதான் இந்த விஷயம் ‘டேப்’ ஆகி, இந்தச் செய்தி உடனடியாக ஆளுங்கட்சிக்குச் செல்லும் என்பது தெரியும். அவ்வாறே சென்றது. உடனே அதற்கு அனுமதித்து, போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இவ்வளவு அநியாயமான, சர்வாதிகார ஆட்சி இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான நாள் வந்துவிட்டது.” என்று அவர் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.