மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் நிலையில் இன்று திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி கிராமத்தில் நடந்த போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
ஆர்பாட்டத்தின் போது பேசிய அவர் “விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு அதிமுக துணை போய் உள்ளது. தன்னை விவசாயி எனக் கூறும் முதல்வர் பழனிச்சாமி விவசாயிகளுக்கு எதிரான செயல்பாட்டை ஆதரிக்கிறார்” என குற்றம்சாட்டினார்.
Tamil Nadu: Dravida Munnetra Kazhagam (DMK) President MK Stalin takes part in a protest against #FarmBills (now laws) in Keezhambi village of Kanchipuram. pic.twitter.com/dsJhOnfTrR
— ANI (@ANI) September 28, 2020
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டா்கள், வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.
சென்னையின் இரு வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தலைமை ஏற்றனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.எஸ்.அழகிரி ” விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். இந்த 3 வேளாண் சட்டங்களும் தவறானவை, ஏற்கனவே இருக்கும் நடைமுறை சிறப்பாக இருக்கிறது. இந்த சட்டங்கள் தொடர்பாக எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயார்.” எனக் கூறினார்.
சட்டங்களை எதிர்த்து கடலூரில் நடந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட திமுக மற்றும் விசிக தொண்டர்கள் மசோதாக்களுக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
#விவசாய_சட்டங்களை_ஏன்_எதிர்க்கவேண்டும்?
1) விவசாய உற்பத்தி, வணிகம், போன்ற யாவற்றையும் கார்ப்பரேட்'மயமாக்குவதன்
மூலம் விவசாய குடிகளுக்கு இவை எதிராக உள்ளன.2) மாநில அரசுகளின் அதிகாரங்கள் மற்றும் உரிமைகளைப் பறிக்கின்றன.
3) நாடாளுமன்றத்தில் அடாவடித்தனமாக இவை நிறைவேற்றபட்டுள்ளன. pic.twitter.com/PBpSDGRVjS
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 28, 2020
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு உட்பட திமுக நிர்வாகிகள் பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம் அண்ணா கலையரங்கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் துவங்கி வைத்தார்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய துரைமுருகன், “வேளாண் சட்ட மசோதாக்களை நாங்கள் மட்டும் எதிர்க்கவில்லை பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் எதிர்க்கின்றனர். இது விவசாயிகளுக்கு எதிரானது” என்று கூறினார்.
இன்றைய நாடு தழுவிய போராட்டங்களின் மூலம் தமிழகம் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இன்றைய போராட்டங்களின் மூலமாக #TNstandsWithFarmers எனக் காட்டியிருக்கிறோம்!
தொடர்ந்து போராடுவோம்!
இதுவரையிலான அதிமுக அரசின் துரோகங்கள் போதும்; வேளாண் சட்டங்களுக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசும் இணைந்து எதிர்க்காவிடில் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்படுவீர்கள்! pic.twitter.com/9Gp57cLfDq
— M.K.Stalin (@mkstalin) September 28, 2020
அதிமுக அரசு வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.