Aran Sei

`உண்மையை மறைத்த அமைச்சர்கள் – போட்டு உடைத்த ஆளுநர்’ – போராட்டம் அறிவித்த திமுக

6 முதல் 12-ம் வகுப்பு வரை, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்  படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அக்டோபர் 24-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிப்பது குறைந்துள்ளதாகக் கூறப்பட்டது. இது குறித்து விசாரித்து அரசுக்குப் பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரையின்படி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங்கைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், உள் ஒதுக்கீட்டிற்கான சட்டத்திற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் கடந்த புதன்கிழமையன்று ஆளுநரைச் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தியதாகவும் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்குப் புதன்கிழமையன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறும் என்றும் இந்தக் கல்வி ஆண்டிலேயே அவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று தெரிவித்த ஸ்டாலின், கட்சிகளுடன் கலந்துபேசி போராட்டத்தை அறிவிக்க முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது பதில் அளித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு ஆளுநர் எழுதியுள்ள கடிதத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் குறித்து பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

“இதுகுறித்து முடிவெடுக்க எனக்கு 3 முதல் 4 வாரங்கள் தேவை” என்றும் “சமீபத்தில் என்னைச் சந்தித்த அமைச்சர்கள் குழுவிடமும் இதே தகவலைத் தெரிவித்தேன்” என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவை என்று ஆளுநர் சொல்லியிருப்பது மசோதாவை நீர்த்துப்போக வைப்பது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இதனையே தன்னைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனால், திட்டமிட்டு மறைத்து விட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

“மாணவர் நலனையும், சட்டமன்றத்தின் மாண்பினையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திமுக இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆகவே, சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும். அழுத்தம் கொடுக்கத் தவறி மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் அக்டோபர் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்