Aran Sei

தி.மு.க தலைமைப் பொறுப்பாளர்கள் நியமனம் 

தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் துணைப் பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஆன்லைன் மூலமும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தி.மு.கவில் நீண்ட காலமாக பொதுச்செயலாளர் பதவி வகித்த க.அன்பழகன் உயிரிழந்த நிலையில் அந்தப் பொறுப்பு நிரப்பப்படாமல் இருந்தது. இந்நிலையில் பொருளாளராக இருந்த துரைமுருகன், பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதால் அப்பொறுப்பிலிருந்து விலகினார். இந்நிலையில் செயலாளர், பொருளாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர்கள் பொதுக்குழு மூலம் தேர்வு செய்வு செய்யப்பட்டுள்ளனர்.

“கட்சியில் சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தோமென்றால் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் துரைமுருகன்தான் மூத்தவர் என்பதால் அவருக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஏற்புடையதே. அதே போல் பொருளாளராக டி.ஆர்.பாலுவும், துணைப்பொதுச்செயலாளர்களாக ஆ.ராசா, மற்றும் பொன்முடி நியமிக்கப்பட்டிருப்பதிலும் விமர்சிக்க ஏதுமில்லை” என்கிறார் பத்திரிக்கையாளர் ராதாகிருஷ்ணன்.

“தலைமைப் பொறுப்புகளை வழங்குகையில் ஒரு கட்சி இரண்டு விசயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். முதலாவது மண்டல வாரியான பிரதிநிதித்துவம். அடுத்து சாதி ரீதியான பகிர்ந்தளிப்பு. இம்முறை இவ்விரண்டும் பூர்த்தியாகவில்லை என்றுதான் தோன்றுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்துக்குக் கீழே கன்னியாகுமரி வரை உள்ள பகுதியிலிருந்து யாருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை. இது, தென் தமிழகத்தைப் புறக்கணித்தது போன்ற ஓர் தோற்றத்தைக் கொடுக்கிறது. தி.மு.கவின் வாக்கு வங்கி தென் தமிழகத்தில் அதிக அளவில் இருக்கிறது. எனவே இவ்விசயத்தை கருத்தில் கொண்டிருக்க வேண்டும்” என்கிறார்.

மேலும், “வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அளவுக்கு தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை. இது, தேவர் சமூகத்தில் எதிர்மறையான எண்ணத்தை உண்டாக்கக் கூடும். மண்டலம் மற்றும் சாதி ரீதியான பிரதிநிதித்துவத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது” என்கிறார்.

இவர்களுக்கு நிச்சயம் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படும் என நினைத்து வழங்கப்படாமல் போனவர்கள் என யாரைச் சொல்வீர்கள்?

“மனோ தங்கராஜ், எ.வ.வேலு, ஆர்.கே.பன்னீர்செல்வம் என தகுதியுடைய பலர் இருக்கிறார்கள். எ.வ.வேலு ஸ்டாலினுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வேலை செய்தவர். ஆனால், சீனியாரிட்டி அடிப்படையில், தகுதியுடைய நபர்களுக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது என்கிற போது அதில் குறைபட்டுக் கொள்ள எதுவுமில்லை” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்