Aran Sei

மனுதர்மம் குறித்து பெரியாரும் அம்பேத்கரும் பேசியதைத்தான் திருமா பேசியுள்ளார் – ஸ்டாலின்

இணைய வழி கருத்தரங்கில் மனுதர்மம் குறித்து திருமாவளவன் பேசியது தொடர்பாக அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது “காவல்துறையின் பாரபட்சமான – வன்மம் நிறைந்த அணுகுமுறை” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொல்.திருமாவளவன் அவர்கள், ஐரோப்பிய பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் காலம் காலமாக என்ன கருத்துகளை எடுத்துச் சொல்லி, இந்த மண்ணில் விழிப்புணர்ச்சியை உருவாக்கினார்களோ, அந்த வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

மக்கள் தொகையில் சரிபாதியும் அல்லது அதற்கும் மேலாக உள்ள பெண்களின் உரிமைகளைச் சனாதன, வருணாசிரம மனுஸ்மிருதிகள் மறுத்ததை திருமாவளவன் சுட்டிக்காட்டிப் பேசியதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

“இதைத்தான் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரப்புரை செய்தனர்” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“திருமாவளவன் பேசியதை, திரித்துச் சொல்வதற்காக வெட்டி – சமூகவலைதளங்களில் பரப்பி, தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்ட நினைக்கும் மதவெறி அரசியல் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதற்கு நேர்மாறாக தோழர் திருமாவளவன் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது” என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆகவே “திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து – வன்முறையைத் தூண்டும் மதவெறியர்களை விடுத்துத் திருமாவளவன் மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்