Aran Sei

கனிமொழி கைது -‘தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா?’ – மு.க.ஸ்டாலின் கேள்வி

த்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி தலைமையில் சென்னை, சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது.

இந்த பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மெழுகுவர்த்தி ஏந்தி இந்த பேரணியில் கலந்துகொண்ட மகளிர் ‘பெண்கள் பாதுகாப்பு’ எனும் வாசகத்தை கொண்ட முகக்கவசத்தை அணிந்திருந்தனர்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் “பட்டியல் சாதியை சேர்ந்த அப்பாவி பெண்ணை,  நான்கு கயவர்கள், செய்திருக்கும் அக்கிரமத்தை கண்டிக்கும் வகையிலே நாம் இங்கு கூடி இருக்கிறோம்” என்று கூறினார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சந்திக்க காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி சென்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு முறை ராகுல் காந்தி எம்பியாக இருந்து வருகிறார். அவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. மற்றவர்களின் நிலையை உத்தரப்பிரதேசத்தில் நினைத்துப் பாருங்கள்” என்றும் அவர் கூறினார்.

“உத்தரப்பிரதேசம் இன்று ரத்தப்பிரதேசமாக மாறிக்கொண்டு இருக்கிறது, இதை தடுக்க வேண்டும்,” என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

பேரணி துவங்குவதற்கு முன்பு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ”கொரோனா கால கட்டத்திலும் இங்கு வந்து இருக்கும் தலைவருக்கும், உங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

“உத்தரப் பிரதேசத்தில் பயங்கரமான பாலியல் வன்கொடுமை நடத்துள்ளது. பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண் முதுகெழும்பு உடைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு இருக்கிறார். அங்குள்ள அரசாங்கம் அந்தச் சம்பத்தை மூடி மறைத்துக் கொண்டுள்ளது. எப்ஐஆர் பதிவு செய்ய மறுத்தார்கள். பசு மாடுகளை பாதுகாக்கும் ஆர்வத்தை பெண்கள் மீது காட்டுவதில்லை” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் “டெல்லி பெண் (நிர்பயா) இறந்த பின்னர் பெண்களை பாதுகாக்க பல சட்டங்கள் வந்துவிட்டன. இருப்பினும், பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

“பாரத் மாதா கி ஜெய் என்று கூறும் உத்தரப் பிரதேசத்தில் இந்த பாலியல் வன்முறை நடக்கிறது. அங்கு இருக்கும் முதல்வர் பெண்களை பாதுகாக்க மறுக்கிறார். இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது” என்றார்.

இதனை தொடர்ந்து, தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட நாடாளுமன் உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்து, மு.க.ஸ்டாலின் “ஹத்ராஸ் அராஜகத்தைக் கண்டித்து திமுக மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை. உ.பி.கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது! தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா? அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்!” என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்