Aran Sei

‘ பாலியல் குற்றவாளி ‘ கிருபானந்தன் விடுதலை – நீதிமன்ற வளாகத்தில் போராட்டம்

திண்டுக்கல் அருகே வடமதுரையில் 12 வயதுச் சிறுமியை வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சலூன் கடை அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள G.குறும்பபட்டியைச் சேர்ந்தவர்கள் வெங்கடாசலம் – லட்சுமி தம்பதி. வெங்கடாசலம் முடி திருத்தும் தொழிலைச் செய்துவரும் நிலையில் மனைவி லட்சுமி கூலி வேலைக்குச் சென்றுவருகிறார். இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதான மகள் உள்ளார்.

2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி, கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் 12 வயதுச் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் இருந்த கிருபானந்தன் (19) என்பவன் சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளான். இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபானந்தனைக் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இக்கொலை தொடர்பாக 35 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த  நீதிபதி புருஷோத்தமன் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி மதியம் தீர்ப்பு வழங்கினார். அதில் கிருபானந்தம் குற்றவாளி என்பதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தார்.

குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்தில் சிறுமியின் தாய் உட்பட உறவினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது சிறுமியின் தாய் லட்சுமி அழுதபடியே மயங்கி விழுந்தார்.

நீதிமன்ற வளாகம் முன்பு மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யாமல் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் கூறி மாதர் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் வனஜாவிடம் அரண்செய் பேசிய போது, “சிறுமியைக் கிருபானந்தம் உட்பட மூன்று பேர் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். ஆனால் கிருபானந்தம் மேல் மட்டுமே வழக்கு தொடரப்பட்டது. சிறுமியின் குடும்பம் ஏழைக் குடும்பம். அரசின் இலவச வக்கீலை வைத்தே வழக்கை நடத்தினோம். அவன் மீது எல்லா ஆதாரங்களும் சரியாகத்தான் இருந்தன. குற்றவாளி தண்டிக்கப்படுவான் என்றே நினைத்தோம். ஆனால் தீர்ப்பு நாள் அன்று, காலை குற்றவாளி கிருபானந்தன் வகையறாவை நீதிபதி தன் அறைக்கு அழைத்துச் சென்று பேசினார். பின் அரை மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கிருபானந்தத்திற்கு எதிராகப் போதிய சாட்சி இல்லை. அதனால் விடுதலை செய்யப்பட்டதாகத் தீர்ப்புக் கூறினார். முழுக்க இதில் பணம் விளையாடியுள்ளது” என்றார்.

மேலும் இதுகுறித்து, தமிழ்நாடு முடிதிருத்துவோர் நலச்சங்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.கே.ராஜாவிடம் பேசிய போது, “திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை G.குறும்பபட்டியில் 12 வயதுச் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும். மேலும் அவ்வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி வெள்ளிக்கிழமை முடித்திருத்துவோர் நலச்சங்கத்தின் தலைமையில் தமிழகம் முழுவதும் 8 லட்சம் முதல் 10 லட்சம் முடித்திருத்தும் கடைகளை அடைத்து கடையடைப்புப் போராட்டம் செய்யவிருக்கிறோம்.”

மேலும்,”காவல்துறை சரியான சாட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அச்சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்தது நிரூபிக்கப்பட்டு விட்டது. அந்தக் குற்றவாளியைக் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்துவது காவல்துறையின் கடமை. ஆனால் அதைக் காவல்துறை செய்யவில்லை. அதனால் நீதிமன்றத்தில் வழக்கு நிற்கவில்லை. இதற்கு மீண்டும் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்