Aran Sei

தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பரப்ப ’தமிழ் அகாடமி’ – டெல்லி முதல்வர் அறிவிப்பு

டெல்லியில் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் அகாடமியை உருவாக்கி, அதற்கு துணைத் தலைவராக தமிழ்சங்க உறுப்பினரை நியமிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, நேற்று (ஜனவரி 3) டெல்லி துணை முதல்வரும், கலை, கலாச்சார, மொழித்துறை அமைச்சருமான மணிஷ் ஷிசோடியா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு நாள் : மாநிலத்தின் இறையாண்மையைக் காப்போம் – தோழர் தியாகுவின் சிறப்புக் கட்டுரை

அதில், “டெல்லியில் தமிழ் மொழி மற்றும் அதன் கலாச்சாரத்தைப் பரப்பும் வகையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில், தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகாடெமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.” என்று அறிவித்துள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா (நன்றி : India TV News)

மேலும், தமிழ் அகாடெமிக்கான தனியான இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் உருவாக்கப்படும் என்று மணிஷ் ஷிசோடியா உறுதியளித்துள்ளார்.

`லண்டன் தமிழ்த்துறையை உயிர்ப்பிக்க வேண்டும்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா

“இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் டெல்லியில் பணிபுரிந்து வருகிறார்கள். அதனால், கலாச்சாரச் செரிவு மிக்க நகரமாக டெல்லி இருந்து வருகிறது. இந்தப் பன்முகக் கலாச்சாரம்தான் டெல்லியை சிறப்பாக வைத்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்திலிருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணிப்புரிந்து வருகிறார்கள்.” என்று மணிஷ் ஷிசோடியா சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக மக்களுக்காக டெல்லி அரசின் சார்பில் ஒரு தளத்தை உருவாக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்றும் தமிழ் மக்களின் கலாச்சாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் இந்த தமிழ் அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் அகாடமிக்கான அவசியத்தை விளக்கியுள்ளார்.

தொல்லியல் துறையில் தமிழ் – பணிந்தது மத்திய அரசு

மேலும், “இந்த அகாடமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், சன்மானம் வழங்கி கௌரவிக்கப்படும். தமிழ் மக்களின் கலாச்சாரத்தை போற்றும் வகையிலான விழாக்களும் நிகழ்ச்சிகளும் அரசு சார்பில் நடத்தப்படும், தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும்.” என்று டெல்லி துணை முதல்வரும், கலை, கலாச்சார, மொழித்துறை அமைச்சருமான மணிஷ் ஷிசோடியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து  “இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியிருக்கும் டெல்லி அரசைப் பாராட்டுகிறேன். முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் மணீஷ்சிசோடியா இருவர்க்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன். தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடிக்குத் தலைவணங்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்