Aran Sei

துரத்தும் சாதி ஆதிக்கம் – உயிர் பயத்தில் ஓடும் ஒரு குடும்பம்

கன் காதல் திருமணம் செய்ததற்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட தனது குடும்பத்திற்காக நியாயம் கேட்டு நாவிதர் சமுதாயத்தை சேர்ந்த பெண் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சூழி வட்டம் உலக்குடி கிராமத்தில் வசிப்பவர் நாவிதர் சமுதாயத்தை சேர்ந்த பஞ்சவர்ணம். வாய் பேசாத மற்றும் காது கேட்காத இவரது அக்கா மகன் ஜெ.கிருஷ்ண மூர்த்தியும் அதே ஊரில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்த அங்குசாமி மற்றும் லட்சுமி அவர்களின் மகளான ஆனந்தியும் காதலித்து வந்தனர். ஆனந்தியின் விருப்பத்தின் பேரில், அவரை திருமணம் செய்ய ஜெ.கிருஷ்ண மூர்த்தி வெளியூருக்கு கூட்டி சென்றுள்ளார். இதை அறிந்த ஆனந்தியின் குடும்பத்தார் உலக்குடி கிராம அலுவலர் தென்னரசு மற்றும் அவரது மனைவியான ஊராட்சி மன்ற தலைவி ராஜம்மாள் உதவியுடன், பஞ்சவர்ணம் குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைக்குமாறு கிராம கூட்டத்தில் முடிவெடுக்க வைத்துள்ளார்கள்.

பஞ்சவர்ணம் குடும்பத்தார் யாரும் ஊர் பொது குழாயில் தண்ணி பிடிக்கக் கூடாது. மளிகைக் கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது. அவர்களில் தொழிலான முடி திருத்தும் தொழில் செய்யக்கூடாது என்று மிரட்டியிருக்கின்றனர். அதைமீறி செயல்பட்டால், கொலை செய்துவிடுவோம் என்று தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியுள்ளனர். உயிருக்கு பயந்து பஞ்சவர்ணமும் அவரது குடும்பமும் உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் எங்கள் வாழ்வாதாரம் மற்றும் குடியுரிமையை காக்க வேண்டும் என்று பஞ்சவர்ணம் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். அதில் எனக்கும் என் குடும்பத்தாரின் உயிருக்கும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதற்கு உலக்குடி கிராம அலுவலர் தென்னரசு மற்றும் அவரது மனைவியான ஊராட்சி மன்ற தலைவி ராஜம்மாள் போன்றோரே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர்களிடம் இருந்து உயிரையும், ஏழ்மையில் இருக்கும் எங்கள் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட நாவிதர் சமுதாயத்தை சேர்ந்த பெண் பஞ்சவர்ணத்திடம் அரண்செய் பேசிய போது, “ஊரவிட்டு தொரத்தி விட்ட பெறகு உலக்குடி பக்கத்துல இருக்க சொந்தகாரவுக காட்டுல தான் வந்து  இருக்கோம். முந்தாநேத்து கலெக்டர் ஆப்பிஸ்ல மனு குடுத்துட்டு, சாயங்காலம் 4 மணி போல இங்க காட்டுக்கு வந்தோம் சார். இப்ப சொந்த ஊருக்கு போக வழியில்லாம வேற ஊருக்கு ஓடிட்டிருக்கோம் ” என்றார்,

அக்கா மகன் கிருஷ்ணமூர்த்தியை பற்றி கேட்ட போது,” என் பையன் என்ன ஆனான்னே தெர்ல சார். அவன என்ன பண்ணாங்கனு தெர்ல” என்றார்.

எத்தனை புதிய இந்தியாக்கள் பிறந்து வந்தாலும், அது ஒடுக்கப்பட்டவர்களை மேலும் மேலும் ஒடுக்கி வைக்கத்தான் செய்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்