Aran Sei

பட்டாசுகள் வெடிக்கத் தடை –  தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

காற்றின் தரம் “மோசமாக” இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி)  தடை விதித்துள்ளது.

”நவம்பர் 10 முதல் 30 வரை நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் இந்தத் தடை அமலில் இருக்குமென்றும் நவம்பர் மாதத்தில் காற்றின் தரம் சராசரி சுற்றுப்புற காற்றின் தரத்தைவிட மிக மோசமாக இருக்கிறது” என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.

”நவம்பர் மாதத்தில் சராசரியாகச் சுற்றுப்புற காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் மாநகரங்களில் நவம்பர் 10 முதல் 30 வரை அனைத்து வகையான பட்டாசுகளையும் விற்பனை செய்வதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ மொத்த தடை விதிக்கப்படும்” என்று தேசிய பசுமை தீர்ப்பாயம்  உத்தரவிட்டது.

”என்ஜிடி தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான குழு, நாடு முழுவதும் சுற்றுப்புற காற்றின் தரம் ‘மிதமாக’ அல்லது அதற்குக் கீழ் உள்ள இடங்களில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே விற்க அனுமதிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” என்றும்  தெரிவித்துள்ளது.

ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், டெல்லி மற்றும் சண்டிகர் போன்ற மாநிலங்களில் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில்  பட்டாசுகளை விற்பனை செய்வதையும் பயன்படுத்துவதையும் ஏற்கனவே தடை செய்துள்ளதாகவும் தீர்ப்பாயம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.

“காற்றின் மாசுபாடு கொரோனா பரவலுக்கு வழிவகுக்கிறது. காற்றின் தரம்குறைவாக உள்ள இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சிறப்பு முயற்சி எடுக்க வேண்டும்” என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்