Aran Sei

தமிழக ஆளுநர் உரை – ” அதிமுகவின் இரட்டை வேடம்; காவு கொடுக்கப்படும் மாநில உரிமைகள் “

திமுக அரசின் இரட்டை வேடங்கள் ஆளுநர் உரையில் மறைக்கப்பட்டாலும், அவற்றை மக்கள் மன்றத்தில் மறைக்க இயலாது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  ஆற்றிய உரை குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசாங்கத்தின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் பற்றியும், இந்த ஆண்டு செய்யவிருக்கிற விசயங்கள் குறித்தும் செய்திருக்கிற சம்பிரதாய ஆளுநர் உரை உழைப்பாளி மக்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும், எந்த பலனற்றதாகவும் அமைந்துள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.

நீட்டிக்கப்படும் துணைவேந்தர்களின் பதவிக்காலம் – ’தமிழக ஆளுநர் தன்னிச்சை முடிவா?’ – பொன்முடி கேள்வி

சட்டப்பேரவையில் கேள்வி கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை  “வெளிநடப்பு செய்துவிட்டுப் போய்விடுங்கள்” என்று கூறியதன் மூலம், அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள எல்லைகளை மீறி, தமிழக சட்டப்பேரவையின் ஜனநாயகத்தை ஆளுநர் கேலிக்கூத்தாக்கியுள்ளார். இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“வரலாறு காணாத அளவிற்கு ஏறியுள்ள விலைவாசி உயர்வை குறைப்பதற்கோ, பெட்ரோல் – டீசல் விலையை குறைப்பதற்கோ இந்த ஆளுநர் உரையில் அதிமுக அரசு ஏதும் தெரிவிக்கவில்லை. கோவிட்-19 பெருந்தொற்றால் ஏழை, எளிய, உழைப்பாளி மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ. 7,500/- நிவாரணம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கை ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனா, ஜி.எஸ்,டி,யால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில், குடிசைத் தொழில், தொழில் முனைவோருக்கு எந்த ஆதரவும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறும் கே.பாலகிருஷ்ணன், “முதலீடுகள் தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 60,674 கோடி வந்ததாகவும், 73 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், இளைஞர்களுக்கு வேலை வழங்கியதாகவும் உரை கூறுகிறது. ஆனால், வேலையின்மையால் அவதிப்படும் இளைஞர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு கூட இது பயனளிக்கவில்லை என்பதே எதார்த்தமான உண்மையாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நிவர், புரவி புயல்களின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000/- வழங்க வேண்டுமென்று வலியுறுத்திய போதும், ரூபாய் 8,000 மட்டுமே வழங்கி விட்டு அதுவும் பெரும்பகுதி விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் சென்றடையவில்லை என்பதே உண்மையாகும். இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயக் கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.” என்று அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் குற்றம், சாத்தான்குளம் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்டது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி, மாற்றுக் கருத்துக்கள் கூறுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது, சேலம் எட்டுவழிச்சாலை போன்றவற்றை எதிர்த்து போராடிய மக்கள் மீது ஏவிவிட்ட அடக்குமுறை, எதிர்கட்சிகள் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு என அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு ஒருதலைபட்சமாகவும், சீர்கெட்டு போயும் உள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசிடமிருந்து மாநில அரசாங்கத்திற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிதி ஈவு, நிவர், புரெவி புயல் பேரிடர் நிவாரண நிதி, கோவிட் பெருந்தொற்று நிவாரண நிதி ஆகியவற்றை பெறுவதற்கு அதிமுக அரசு திராணியற்று எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது இந்த உரையின் மூலம் தெளிவாகிறது என்று அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “மத்திய அரசின் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்கள், ஒரே தேசம், ஒரே ரேசன் கார்டு திட்டம், மின்சார திருத்தச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருத மொழி திணிப்பு, வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, சுற்றுச்சூழல் மசோதா, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு, உள்ளிட்ட திட்டங்களுக்கு மத்திய அரசிற்கு அடிபணிந்து மாநில உரிமைகளையும், தமிழக மக்களையும் காவு கொடுக்கும் அரசாக அதிமுக அரசு இருப்பதை இந்த ஆளுநர் உரை நிரூபிக்கிறது.” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தின் விவசாயம், தொழில் வளர்ச்சி, சிறு-குறு தொழில்கள், புதிய வேலைவாய்ப்பு, சமூக நீதி, தமிழ்மொழி கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளது என்பதை இந்த ஆளுநர் உரை பறைசாற்றுவதோடு, அதிமுக அரசின் ஊழல் – முறைகேடுகள் நடவடிக்கைகளுக்கு ஆளுநர் தனது உரையில் திரையிட்டு மறைத்துள்ளார் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசாங்கத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்து மாநில உரிமைகளை காவு கொடுப்பது, மக்கள் விரோத கொள்கைகள் அனைத்திற்கும் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கொடுப்பது, தமிழகத்திற்கு விரோதமான திட்டங்களை ஆதரிப்பது போன்ற இரட்டை வேடங்கள் இந்த உரையில் மறைக்கப்பட்டாலும், மக்கள் மன்றத்தில் மறைக்க இயலாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்க விரும்புகிறது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்