Aran Sei

சங்கம் அமைத்ததற்காக பணியிட மாற்றம் – வீடியோவை வெளியிட்டு காணாமல்போன தொழிலாளர்

தொழிற்சாலை நிர்வாகம்  பழிவாங்கும் நடவடிக்கையாக, கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதியில் பணிமாற்றம் செய்யப்பட்டதால் மனமுடைந்த தொழிலாளர், விடியோ பதிவொன்றை வெளியிட்டு காணாமல் போயுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரிலுள்ள கனடா நாட்டை சேர்ந்த மேக்னா என்ற தொழிற்சாலையில், மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

https://www.facebook.com/indianlabournews/videos/228881072098538

இன்று (டிசம்பர் 28), சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இடது தொழிற்சங்க மையத்தில் (எல்டியுசி) இணைந்ததற்காக, தன்னுடன் சேர்ந்து சில தொழிலாளர்களை, கொரோனா தொற்று அதிகமுள்ள மகாராஷ்ட்ரா மாநிலம் பூனேவிற்கு, தொழிற்சாலை நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள்: சீர்த்திருத்தமா? சீர்கேடா? – விரிவான அலசல்

அதற்கான காரணத்தை நிர்வாகத்திடம் கேட்ட போது, அவரை பணியில் இருந்து நீக்குவோம் என்று மிரட்டியதாகவும், நிர்வாகத்தின் இந்த செயலுக்கு தொழிலாளர் நலத்துறையும் துணைபோவதாகவும் வீடியோவில் கூறியுள்ளார்.

”இதற்கு எதிராக நூறு நாளைக்கு மேல் போராடி வருவதால், என் குடும்பமும், தொழிலாளர்களின் குடும்பமும் படும் கஷ்டத்தை என்னால் தாங்க முடியவில்லை. இந்த முடிவால் தொழிலாளர்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். இந்த முடிவிற்கு காரணம் நிர்வாகமும், தொழிலாளர் நலத்துறையும் தான்” என்று அந்த வீடியோவில் மணிகண்டன் கூறியுள்ளார்.

சம்பளம் வழங்காததால் தொழிற்சாலையில் கலவரம் – தொழிலாளர்களிடம் மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்

இதுகுறித்து, உழைப்போர் உரிமை இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ராஜகுருவிடம் அரண்செய் பேசிய போது, “மேக்னாவில். ஏற்கனவே உள்ள சங்கம் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதால், அவர்களுக்கென்று ஒரு சங்கம் வேண்டும் என்று இடது தொழிற்சங்க மையத்தில் இணைந்தார்கள். அதனாலேயே, அச்சங்கத்தின் தலைவர், செயலாளர் உட்பட ஆறு பேரை சஸ்பண்ட் செய்தார்கள். 12 பேரை புனேவுக்கு பணியிட மாற்றம் செய்தார்கள்.” என்று தெரிவித்தார்.

”பணிமாற்றம் செய்யப்பட்ட அந்த ஒரு நாள் மட்டும், புனே மாவட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது. இது திட்டமிட்ட பழிவாங்கல். இதை கைவிட வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டார்கள். நிர்வாகம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மாறாக பணியிட மாற்றத்தை ஏற்க மறுத்த 12 பேரையும் சஸ்பெண்ட் செய்தார்கள்.” என்று ராஜகுரு கூறினார்.

`புயலை விட ஆபத்தானது இந்திய அரசு’ – தொழிலாளர் சங்கங்கள்

மேலும், “கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி, இவர்களை புனேவில் உள்ள தொழிற்சாலையில் வந்து சேரச் சொல்கிறார்கள். அதே நாள், பூனேவில் இருந்து 10 தொழிலாளர்களை இங்கே மாற்றம் செய்கிறார்கள். புனே தொழிற்சாலையை இவர்களை வைத்தே நடத்தலாமே. ஏன் இந்த மாறுதல்கள்?” என்று ராஜகுரு கேள்வி எழுப்பினார்.

பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி, தொழிலாளர் நலத்துறையும், காவல்துறையும் பாதிக்கப்பட்டவர்களை இழுத்தடிக்கிறது என்றும் இதன்மூலம் அவர்களுக்கு உளவியல் ரீதியாக தொல்லைக்கொடுக்கிறது என்றும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ராஜகுரு குற்றம்சாட்டினார்.

வீடியோவை வெளியிட்ட தொழிலாளி மணிகண்டனுக்கு என்ன நேர்ந்தது என்று, இதுவரை தெரியவில்லை.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்