நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அவதூறாகப் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மீது, 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ”தடுப்பூசிதான் அவரது இன்றைய நிலைக்குக் காரணம். அவருக்கு மட்டும் ஏதாவது ஆனால் சும்மா இருக்க மாட்டேன்” என தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தியாவில் கொரோனாவே இல்லை, எதற்காக முகக்கவசம் அணிகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதையடுத்து அவர்மீது சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டபுகாரின் பேரில் வடபழனி காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விவேக்கின் மரணம் தொடர்பாக அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல்), 270 (தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல்), 505(1), (b) (சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள்மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல்), தொற்றுநோய் தடுப்புச் சட்டம் (Section 3 of Epidemic Deceased Act – 1897), பேரிடர் மேலாண்மைச் சட்டம் (Section 54 of the Disaster Management t Act – 2005) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாகப் புரிந்து கொண்டாதாகவும், உள்நோக்கத்தோடு தடுப்பூசிகுறித்து அவதூறு பரப்பவில்லையெனவும், எதேச்சையாகப் பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.