Aran Sei

பணியை உறுதி செய்யுங்கள்: துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

Image Credits: The Hindu

ரண்டு வாரங்களுக்கு முன்னர் ஊதியத்தை உயர்த்தி வழங்கக்கோரி துப்புரவுத் தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ரிப்பன் மாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

3000-க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டதால் அம்பத்தூர் போன்ற மண்டலங்களில் வேலைகள் தடைபட்டன. சென்னை மாநகராட்சி 291 தொழிலாளர்களை அடையாளம் கண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளில் இடையூறு விளைவித்ததாகக்கூறி அவர்களைப் பணியிலிருந்து நீக்கியது.

வேலை பறிபோன 291 பேரும் மீண்டும் வேலை வழங்கிடக்கோரி இவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க ஆணைக்கு ஏற்ப ஊதியத்தை வழங்கக்கோரி இவர்கள் போராடிவந்தனர். தேசிய நகர்ப்புற வாழ்வாதார பணி (NULM) அமைப்பின் கீழ் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் 60% மட்டுமே வழங்கப்படுகிறது.

2017 அக்டோபர் 11 தேதியிட்ட அரசு ஆணை நாளொன்றிற்கு ரூ. 624.50 -ஐ ஊதியமாக நிர்ணயித்தது. ஆனால், துப்புரவு தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு ரூ.379 மட்டுமே பெறுகிறார்கள்.

பேரிடர் காரணமாக வருவாய் குறைந்துவிட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். “ஊழியர்கள் கேட்கும் ஊதியத்தை வழங்க முடியாத நிலையில் நாங்கள் உள்ளோம்” என்று ஒரு மாநகராட்சி அதிகாரி கூறியுள்ளார். மாநகராட்சி, நகரின் 15 மண்டலங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் 3,500 டன் குப்பைகளைச் சேகரிக்கிறது. மாநகராட்சி 19,000 தொழிலாளர்களைத் துப்புரவு பணியில் நியமித்துள்ளது.

“கொரோனா பேரிடர் காலகட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கிட வேண்டும். பெரும்பாலான ஊழியர்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லை. அவர்களுக்கு இந்த வேலை மிகவும் தேவை,” என்று துப்புரவுத் தொழிலாளர்களின் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய தனியார் துப்புரவு நிறுவனம் நிர்வாகி அக்டோபர் மாதம், அடையாரில் பணிகளைத் தொடங்கவுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்