Aran Sei

தவ்ஹீத் ஜமாத்தை காலி செய்ய நிர்பந்தம் – சட்டத்தை மீறும் மத்திய அரசு

ந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, இந்தியாவில் வசித்து வந்த பலர் பாகிஸ்தானுக்கு குடியேறினார். அவர்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற சொத்துகள் ‘எதிரி சொத்துகள்’ என்று அழைக்கப்படுகிறது. 1968 ஆம் ஆண்டு, இந்தச் சொத்துகளை ஒழுங்குபடுத்தவும், அவற்றை பராமரிப்போருக்கான அதிகாரங்களை வரையறுக்கவும் ’எதிரி சொத்து சட்டம் 1968’–ஐ இந்திய அரசு இயற்றியது.  இதற்காக அலுவலகம் ஒன்றையும் நிறுவி, சொத்தின் பாதுகாவலர்களாக சில முகவர்களையும் நியமித்தது.

சிறுபான்மையினர் மீது தேச துரோக வழக்குகள்: முன்னணியில் கர்நாடகா

2016 ஆண்டு மார்ச் மாதம், இச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து, மக்களவையில் நிறைவேற்றியது.  அதன்படி,

  1. எதிரி சொத்து சட்டம், 1968-ன் 8ஏ பிரிவின் கீழ் உள்ள உட்பிரிவு 1-ன் படி எதிரி சொத்து பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ள எதிரி சொத்து பங்குகளை விற்க ‘கொள்கையளவிலான’ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  2. இதனை விற்க முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் எதிரி சொத்து சட்டம், 1968-ன் 8ஏ பிரவின் கீழ் உள்ள உட்பிரிவு 7-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
  3. இந்த விற்பனையில் இருந்து வரும் வருமானம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் அரசாங்க கணக்கில் பங்கு விலக்க வருமானமாக வரவு வைக்கப்படும்.

‘ஈழத்தமிழருக்கும் சிறுபான்மையினருக்கும் துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி’ – ஸ்டாலின் குற்றச்சாட்டு

இதன் மூலம், வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்தவர்கள் தாங்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற சொத்துகளை இனிமேல் விற்க முடியாது. மேலும், அந்தச் சொத்துகளைப் பராமரித்துக் கொண்டிருக்கும் தனிநபரோ/ அரசுத் துறையோ/ தனியார் நிறுவனமோ அந்தச் சொத்துகளை உரிமை கொள்ளலாம் என்பதே இந்த எதிரி சொத்து சட்டத்திருத்த மசோதாவின் முக்கியமான அம்சம்.

இதைத் தொடர்ந்து, 2018 நவம்பர் மாதம், எதிரி சொத்துகள் விற்கப்படுவது தொடர்பாக, மோடி தலைமையிலான மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், எதிரி சொத்துகளை நிர்வகிக்கும் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 996 நிறுவனங்களில் 6,50,75,877 பங்குகள் உள்ளன. இவற்றில், 588 நிறுவனங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.  அதில், 20,323 பேரின் இந்த பங்குகள் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. இந்நிலையில் ரூ.3000 கோடி மதிப்புள்ள இந்தப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக் களமாக மாறியுள்ளது இந்தியா – ஆய்வு முடிவு

இந்நிலையில், நேற்று (ஜனவரி 7) சென்னை மண்ணடியில் எதிரி சொத்து சட்டத்தின் கீழ் வரும் கட்டடத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைமையகத்தை, எவ்வித முன்னறிவிப்புமின்றி, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர காவல்துறையினர் வந்துள்ளனர். இதையெடுத்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தரப்புக்கும், காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் தலைமை அலுவலகம் முன்பு, ஏராளமான காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.

இதனைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்
(நன்றி : தவ்ஹீத் ஜமாஅத்)

மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்

இதுகுறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் பா.அப்துல் ரஹ்மானிடம் அரண்செய் பேசிய போது, “12 வருடங்களாக இந்தக் கட்டடத்திற்கு வாடகை செலுத்தி வருகிறோம். எதிரி சொத்து சட்டத் திருத்தின் படி, சொத்தில் இருப்பவர்களுக்கு விற்க முன்னுரிமை வழங்கப்படும். அதன் படி எங்களிடம், இந்தக் கட்டடத்தை வாங்க விருப்பம் உள்ளதா என்று கேட்க வேண்டும். ஆனால், நேற்று முன் தினம் திடீரென்று வந்த காவல்துறையினர், அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்றார்கள். பிறகு நாளை வருவோம். கட்டடத்திற்கு சீல் வைப்போம் என்றார்கள். நேற்று ஏராளமான காவலர்களுடன் வந்தார்கள்.” என்று தெரிவித்தார்.

காவல்துறையினருடனான பேச்சு வார்த்தை பற்றி கூறும்போது, “எங்களை காலி செய்ய சொல்லி சட்டப்படி நோட்டீஸ் அனுப்புனீர்களா இல்லை சொத்தை வாங்க விரும்பம் உள்ளதா என்று கேட்டீர்களா என்று கேள்வி எழுப்பினோம். அரசு சொல்லும் விலையைக் கொடுத்து கட்டடத்தை வாங்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றோம். சட்டப்படி நடக்கும் நாங்கள் ஏன் காலி செய்யவேண்டும் என்றோம். அவர்கள் எதையும் காதில் வாங்கவில்லை. சீல் வைக்க வேண்டும். வெளியேறுங்கள் என்பதையே திரும்ப திரும்ப சொன்னார்கள்.” என்று கூறினார்.

தப்ளிக் ஜமாத் உறுப்பினர்கள் 18 பேர் விடுதலை – சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

மேலும், “200 காவலர்கள் மேல் குவிந்தார்கள். தடியடி நடப்பதற்கான சூழல் உருவாகப்பார்த்தது. இப்போது இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருக்கிறார்கள். இது போதுமானதாக இல்லை. வடநாட்டில் பெரும்பாலான எதிரி சொத்துகள் அம்பானியிடமும், அதானியிடமும்தான் உள்ளது. இந்த எதிரி சொத்து திருத்தச் சட்டமே, அவர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்டதுதான் என்று சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான ஆளூர் ஷானவாஸ் தன் முகநூல் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.

கொரோனா பரப்பியதாக அவதூறு : மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

அதில்,”சங்பரிவார் அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கட்டற்ற நிதி வரும் அதே வேளையில், கிறித்தவ நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டு அவற்றின் நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக் மீது நெருக்கடிகள் பாயும் அதே வேளையில் பாபா ராம்தேவ் போன்றவர்களுக்கு அரசு வளங்கள் அள்ளிக் கொடுக்கப்படுகின்றன. அந்த வரிசையில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தை சீல் வைக்க மத்திய உள்துறை அதிகாரிகள் முயன்றுள்ளனர்.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்ததாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதித்தது. வனத்தையும் யானைகள் வழித்தடத்தையும் அழித்ததாக ஜக்கி வாசுதேவ் மீது வழக்கு உள்ளது. ஆனால், தவ்ஹீத் ஜமாஅத் மீது எவ்வித சட்டவிரோத குற்றச்சாட்டும் கிடையாது. பேரிடர் மீட்பு, குருதிக் கொடை உள்ளிட்ட அறப் பணிகளின் மூலம் அறியப்பட்ட அமைப்பு அது. அதனுடன் கருத்து ரீதியில் முரண்படுவோர் கூட இதை மறுக்க மாட்டார்கள். அப்படியிருக்க, தவ்ஹீத் ஜமாத்தை குறிவைத்து பாஜக அரசு செய்யும் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க வெறுப்பின் வெளிப்பாடேயாகும். ஜனநாயக சக்திகள் அனைவரும் இதை கண்டிக்க வேண்டும்.” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான ஆளூர் ஷானவாஸ் கோரியுள்ளார்.

“புயலால் பாதிக்கப்படும் மக்களுக்குப் பள்ளிவாசல்கள் பாதுகாப்பு மையமாக விளங்கட்டும்” – டிஎன்டிஜே

இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவஹருல்லா, ”சென்னையில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை உரிய தாக்கீடு (NOTICE)  அளிக்காமல் சீல் வைத்த மோடி அரசின் வன்கொடுமையை வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்