Aran Sei

தீண்டாமைச் சுவர் : ’கேட்டது 17 உயிர்களுக்கு நீதி; கிடைத்தது பொய் வழக்குகள்’

கோவை மாவட்டம் நடுவூர்ப் பகுதியில் தீண்டாமைச் சுவர் விழுந்து 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், தங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடுவூருக்கு உட்பட்ட ஏ.டி.காலனி குடியிருப்பின் பின்புறத்தில், சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத்திற்குக் கருங்கல்லால் ஆன தீண்டாமைச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது.

’தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா ? – நாகை திருவள்ளுவன்

சென்ற ஆண்டு, டிசம்பர் மாதம் 2ஆம் தேதி, கனமழையின் காரணமாக இந்தச் சுவர் இடிந்து, அருகில் இருந்த அருந்ததியினர் குடியிருப்பில் உள்ள நான்கு ஓட்டு வீடுகளின் மீது விழுந்தது. அந்த வீடுகள் முழுவதும் தரைமட்டமாகின. வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

அப்போது பெய்துகொண்டிருந்த கனமழையின் காரணமாகவும், இருட்டின் காரணமாகவும் விபத்து நடந்தது அருகில் இருந்தவர்களுக்கு உடனடியாகத் தெரியவில்லை. சூரிய உதயத்திற்குப் பின்பே, அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு விபத்து குறித்து தெரியவந்தது.

அந்தப் பகுதி மக்களும், காவல் மற்றும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, பேரிடர் மீட்புக் குழுவினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.

தெற்குத்திட்டை வன்கொடுமை: சமூக விழிப்புணர்வு மையம் விரிவான அறிக்கை

இந்தச் சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அருகில் உள்ள பகுதிகளில் கூலித் தொழிலாளிகளாகப் பணிபுரிந்து வந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய வந்த, அப்போதைய மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணியிடம், அப்பகுதி மக்கள் விபத்துக்குக் காரணமான தீண்டாமைச் சுவரைக் கட்டியவரைக் கைது செய்ய வேண்டும், அதை முழுவதுமாக இடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும், அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

உள்ளாட்சிகளில் தொடரும் சாதியப் பாகுபாடு – புறக்கணிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில், சமீபத்தில் அதே இடத்தில் மீண்டும் ஒரு சுவர் புதிதாக எழுப்பப்பட்டுள்ளது.

நன்றி : பேஸ்புக்

இந்நிலையில், நடுவூர்ப் பகுதில் பாதிக்கப்பட்ட சரவணனிடம் அரண்செய் பேசிய போது, ”பாதி பேருக்கு மேல் இழப்பீடு கொடுக்கவில்லை. அதே இடத்தில் வீடு கட்டித்தருவதாகச் சொன்னார்கள். ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் கட்டித்தரவில்லை. அரசு வேலை குறித்த வாக்குறுதியும் முழுதாக நிறைவேற்றப்படவில்லை. எழுதப்படிக்கத் தெரியாத இளைஞனுக்கு, அவனுக்குத் தெரியாத வேலையைக் கொடுத்தார்கள். இதுகுறித்து தொடர்ச்சியாக, கலெக்டர், தாசில்தார், நகராட்சி தலைவர்களுக்கு மனு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.” என்று கூறினார்.

” வழக்கை வாபஸ் பெற மாட்டோம் ” – சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்

“நீதி கேட்டுப் போராட்டம் செய்தால், எங்கள் மீது பொய் வழக்குகள் போடுகிறார்கள். என் மீதும் ஒரு வழக்கு உள்ளது. எங்கள் சமூகம் கேட்பாரற்றுக் கிடக்கிறது. ஆனால், சுவரைக் கட்டிய குற்றவாளிக்கு, அதே இடத்தில் புதிய சுவரைக் கட்ட எல்லா அனுமதியையும் அரசு கொடுத்திருக்கிறது. மீண்டும் கட்டப்பட்டு எங்கள் முன்னால் நிற்கிறது.” எனக் கூறுகிறார் சரவணன்.

சுவர் இடிந்து விழுந்த கோர நிகழ்வில், உயிரிழந்தவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி நேற்று (டிசம்பர் 2) அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டதாகவும், தங்களை அஞ்சலிகூட செலுத்தவிடாமல் கெடுபிடி செய்தனர் எனவும் கூறுகிறார் சரவணன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்