Aran Sei

தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – எடப்பாடி பழனிசாமி

மிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கட்சியே கூட்டணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் என்றும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (டிசம்பர் 27), அதிமுக தேர்தல் பிரச்சார தொடக்கக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியும் இதே கருத்தை கூறியிருந்தார்.

அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – குளறுபடிக்கு முற்று வைத்த கே.பி. முனுசாமி

நேற்று (டிசம்பர் 28), கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியலாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “தமிழகத்தைப் பொருத்தவரையில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது தான் அதிமுக-வின் நிலைப்பாடு.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது என்றும் “நாங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டோம். எங்களுடைய தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அமைக்கப்படும்.” என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? – அமைச்சர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடு

“பாஜக இன்னும் உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லையே” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இன்னும் தேர்தலே அறிவிக்கவில்லையே” என்று பதில் அளித்துள்ளார் என்று தி இந்து குறிப்பிட்டுள்ளது.

மேலும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட லஞ்ச பட்டியல் குறித்து கேள்வி எழுப்பிய போது, “நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழகத்தை பற்றி என்ன தெரியும். 70 வயது வரை நடித்து விட்டு, ரிட்டயர்ட் ஆகும் காலத்தில் வந்து அரசியல் செய்கின்றார். ஆனால், நான் 46 ஆண்டு காலம் அரசியலில் இருக்கின்றேன். அவர் நடிப்பில் வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவர் பூஜ்ஜியம்தான்.” என்று விமர்சித்துள்ளார்.

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

டிசம்பர் 25-ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய சுற்றுச்சூழல், வனம், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது, “அடுத்தாண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பழனிசாமி நிறுத்தப்படுவாரா” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

‘பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா?’ – பதிலளிக்க மறுத்த மத்திய அமைச்சர்

அதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்காமல் இருந்தார். மீண்டும் செய்தியாளர்கள் இக்கேள்வியை எழுப்பிய போதும் அவர், பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்