Aran Sei

அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன உயிர்

சென்னை புளியந்தோப்பில் மழைநீரில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்து அலிமா என்கிற பெண் உயிரிழந்துள்ளார்.

சென்னை புளியந்தோப்பில் உள்ள பெரியார் நகர் குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வந்தவர் அலிமா(45). வீட்டு வேலை செய்து வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்து வந்தார். இந்நிலையில் செப் 14ம் தேதி புளியந்தோப்பு, நாராயணசாமி தெருவில் மழைநீர் தேங்கியிருந்த சாலையில் நடந்து சென்ற போது, அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்ததால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

சோகமான இந்த நிகழ்வு அருகே இருந்த கடையொன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

“தெரு விளக்குக்கான ஒயர் நிலத்தடியில் அறுந்து கிடந்ததை மக்கள் மின்சார வாரிய அலுவலர்களிடம் தெரியப்படுத்திய போது தெரு விளக்கு என்பதால் இதற்கு மாநகராட்சிதான் பொறுப்பு என சொல்லியிருக்கிறார்கள். மாநகராட்சி நிர்வாகமோ இதற்கு மின்சார வாரியம்தான் பொறுப்பு எனக் கூறியிருக்கிறது. இந்த அலைக்கழிப்புக்கு நடுவே மாநகராட்சி ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் இறங்கினர். முழுமையாக வேலையை முடிக்காமல் பாதியிலேயே வேலையை நிறுத்தி விட்டு சென்றிருக்கின்றனர். இந்த அலட்சியத்தால்தான் அப்பெண் இறந்திருக்கிறார்” எனக் குற்றம் சாட்டுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன்.

“அலட்சியமும் பெரிய குற்றம்தான். இதற்கு குற்றவியல் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்றாலும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின் வாரியத்துக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் இம்மரணத்தில் பொறுப்பு இருக்கிறது. சம்பவம் நடந்த நாராயணசாமி தெரு முக்கியமான போக்குவரத்து கொண்ட சாலை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் இப்படி அலட்சியமாக நடந்து கொண்டதற்கு கடுமையான நடவடிக்கை தேவை. இறந்த அலிமாவின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டே ஆக வேண்டும்” என்கிறார் ராமகிருஷ்ணன்.

இந்த சோக நிகழ்வைத் தொடர்ந்து மாநகராட்சி பொறியாளர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். அலிமாவின் மரணம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவருக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்