Aran Sei

இன்னும் வடியாத வெள்ளம் – தத்தளிக்கும் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு மக்கள்

மிழகத்தில் புயல் பாதிப்புக் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்தியகுழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் புகைப்படங்களை மட்டுமே பார்த்து ஆய்வு செய்வதாகவும், அதனால் தங்கள் குறைகளைக் கூற பொதுமக்களால் முடியவில்லை என்று சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவார், புரேவி, போன்ற புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் சேதங்கள் குறித்தும் ஆய்வு செய்வதற்காகத் தில்லியிலிருந்து மத்திய குழு நேற்று (டிசம்பர் 5) சென்னை வந்துள்ளது. இந்நிலையில் மத்திய குழுவானது இரு பிரிவுகளாகப் பிரிந்து தென் சென்னை மற்றும் வட சென்னை ஆகிய பகுதிகளில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

`சென்னைப் பெரு வெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா?’ – உயர்நீதிமன்றம்

மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குநர் மனோகரன், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மண்டல அலுவலர் ரனஞ்ச்ஜெ சிங், மீன்வளத்துறை ஆணையர் பால் பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தென் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தென்சென்னை பகுதிக்குட்பட்ட வேளச்சேரி ராம்நகர்,  அதைத் தொடர்ந்து பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றி பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் சென்று ஆய்வு நடத்தவில்லை. மாறாக அந்தந்த பகுதிகளின் நுழைவாயிலில், மழை பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து காட்சிக்கு வைக்கப்பட்ட புகைப்படங்களை மட்டும் பார்த்துவிட்டு மக்களின் குறைகளை கேட்காமலேயே மத்திய குழு அடுத்தடுத்த  பகுதிக்கு சென்றுள்ளனர் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘நிவார்’ புயல் – இது பருவநிலை மாற்றத்தின் பேராபத்து – அருண்குமார் ஐயப்பன்

இதேபோல் பள்ளிக்கரணை பகுதிகளிலும் ஆய்வு செய்வதாகக் கூறி மக்களிடம் குறைகளைக் கேட்காமலேயே புகைப்படங்களை மட்டும் பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷிடம் அரண்செய் பேசிய போது, ”செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம், ஜவஹர் நகர், காந்தி நகர் ஏரி போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. அப்படியிருக்கையில், அவற்றைப் பார்வையிட வராமல், பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூடாரம் போட்டு வைத்திருக்கும் வெள்ள பாதிப்பு புகைப்படங்களை மட்டும் மத்திய குழு பார்வையிட்டு சென்றுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

கஜா புயலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் – அழிவிலிருந்து மீளாத விவசாயிகள்

மேலும், “நிரம்பிய ஏரிகளின் தண்ணீர் அந்த பகுதிகள் வழியாக தான் வர வேண்டும். இந்நிலையில், அங்கே மேலும் புதிய குடியிருப்புகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதனை கைவிட்டு அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ” என்று வலியுறுத்தியுள்ளார்.

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளின் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சமூக செயற்பாட்டாளர் இசையரசு-விடம் அரண்செய் பேசிய போது, “முதலவர் எடப்பாடி பழனிசாமியே, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்குள் வராமல் காரப்பாக்கம் வரை மட்டுமே வந்து, வெள்ள பாதிப்பை பார்வையிட்டு சென்றுள்ளார். சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் செம்மஞ்சேரி மெயின் ரோடு வரை வருவார்கள். ஆனால் குடிசை மாற்று வாரியத்திற்குள்ளோ, சுனாமி குடியிருப்புக்குள்ள வர மாட்டார்கள். ஏனென்றால், இன்னும் இங்கே முழங்கால் வரை தண்ணீர் நிற்கிறது. எப்போதுமே இதே நிலைமை தான் இங்கு.” என்று குறிப்பிட்டுள்ளார்.

`புயலை விட ஆபத்தானது இந்திய அரசு’ – தொழிலாளர் சங்கங்கள்

மேலும், “இந்த பகுதிகள் எல்லாம் சதுப்பு நிலங்களும் ஏரிகளும்தான். இங்கு குடியிருப்புகள் கட்டியதே அரசின் தவறு. சாதாரணமாக இரண்டு மணி நேர மழைக்கே இங்கு தண்ணீ தேங்கிவிடும். பாம்பு, தேள் போன்ற விஷப் பூச்சிகள் வந்து விடும். ஆனால் இத்தனைக்கும் மத்தியில் தான், இந்த குடியிருப்புகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்