Aran Sei

‘தியாகச் சுடர் திலீபன் வரலாற்றைப் படமாக்கு’ பாரதிராஜா அறிவுரை

Credits Scroll

இலங்கை கிரிக்கெட் வீரர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கக் கூடாது என திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இலங்கை அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

படத்தில் நடிப்பது குறித்து பெருமையாக உணர்வதாக விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார். இதனிடையே, விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என ட்விட்டரில் பிரபலங்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் “இது கோடிக்கணக்கான தமிழர்களின் ஆறாத பெருவலி. அந்த பாத்திரத்தில் சிங்களவன் நடித்தால் யாரும் கொதிக்கப் போவதில்லை.” என்று குறிப்பிட்டு நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

 

’இது கலைஞரின் சுதந்திரத்தில் தலையிடும் போக்காக கருத வேண்டாம்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா விஜய் சேதுபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும், கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம்.”

 

”தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

”தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.” என்றும் கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.

”உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.” என்று பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

Credits India Herald

மேலும், ”அகிம்சை வழியில் போராடி தீயாக இன்றும் சுடர்  விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாற்றை உலகரங்கில் எடுக்க முன் வா. ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.” என இயக்குனர் பாரதிராஜா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்திலிருந்து ‘தம்பி’ விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் இதுகுறித்து கவிதை ஒன்று பதிவிட்டுள்ளார். ’கலையாளர் விஜய் சேதுபதிக்கு…’ என்று தொடங்கும் 12 வரி கவிதையில், விஜய் சேதுபதி பிரபலமாக வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி கறைபட்டுக் கொள்ள வேண்டாம் என்றும், ’இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்’ எனவும் கூறியுள்ளார்.

 

இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 800 திரைப்படம் கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த அரசியலும் கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்