Aran Sei

சி.பி.எஸ்.இ. பாட நூலில் உச்சிக் குடுமியுடன் வள்ளுவர்: ’சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும்’ – வைகோ கண்டனம்

த்திய அரசின் சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் உருவப்படம் இடம்பெற்றிருப்பதற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலைநிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் கூட்டம், திருவள்ளுவரை தம்வயப்படுத்த முனைந்து நிற்கின்றது” என்று கூறியுள்ளார்.

’எல்லோருடைய வீட்டிலும் அம்பேத்கர் புகைப்படம்’ : விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

சமஸ்கிருத தர்ம சாத்திரம்தான், முப்பாலில் ஒன்றாகிய அறத்துப்பால் என்றும், அர்த்தசாஸ்திரம்தான் பொருட்பால் என்றும், காம சூத்திரம்தான் இன்பத்துப்பால் என்றும் கதை கட்டிப் பார்த்ததாக குற்றஞ்சாட்டிய அவர், திருக்குறள் உரை ஆசிரியர்களுள் ஒருவரான பரிமேலழகர் தம் ஆரியக் கருத்துகளைத் திணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஓவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மா வரைந்து வெளியிட்ட திருவள்ளுவரின் உருவப் படத்திற்குத்தான், தமிழக அரசு ஏற்பு அளித்திருப்பதாகவும், அந்தப் படம் வரைந்ததற்கான விளக்கம் அளித்து, வேணுகோபால் சர்மா அவர்கள் வழங்கிய கருத்தை, சென்னை பல்கலைக் கழகம் ஒரு சிறிய வெளியீடாகக் கொண்டு வந்ததையும் நினைவு கூர்ந்து பேசிய வைகோ,  “திருவள்ளுவர் கருத்து உலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரைச் சுற்றி, அறிவு ஒளி மட்டும் இருக்குமாறு உருவம் வரையப்பட்டது. தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு ஆகியவற்றைக் கொண்டு இருப்பதால் திருவள்ளுவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டது. உச்சிக்குடுமியும், வெட்டப்பட்ட சிகையும் பல இனக்குழுக்களுக்கு அடையாளம் ஆகி விட்டதால், திருமுடியும் நீவப்படாத தாடியும் இருப்பது போல வரையப்பட்டது” என்று, ஓவியர் வேணுகோபால் சர்மாவின்  விளக்கத்தை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்.பி.பி.ஸ் சேர்க்கைக்கு நடைமுறை ஆங்கில அறிவு அவசியம் – உச்சநீதிமன்றம் கருத்து

“இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் கைப்பாவை ஆகிப்போன அ.தி.மு.க. அரசு, கடந்த 2020, டிசம்பரில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சியில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் திருப்பணியைச் செய்தது. பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்குத் தமிழகமே கொந்தளித்துக் கண்டனம் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சி.பி.எஸ்.இ. 8 ஆம் வகுப்பு பாட நூலில் திருவள்ளுவரை ‘உச்சிக் குடுமி’யுடன் சித்தரித்து படம் வெளியிட்டு, இழிவுபடுத்தி உள்ளனர். இச்செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது” என்று அவர் கூறியுள்ளார்.

டெல்லி கலவரத்தில் நடந்த கொலை: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சாட்சியளித்துள்ள இந்து குடும்பங்கள்

மத்திய அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ. பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழக அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் திருஉருவப் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்துவதாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்