Aran Sei

பிரிவினையைத் தூண்டும் போஸ்டர் – இந்து முன்னணி மீது வழக்குப் பதிவு

ந்துக்கள் அனைவரும் இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம் என்ற சர்ச்சை போஸ்டர் ஒட்டிய இந்து முன்னணி பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ‘தீபாவளி முதல் இந்துக்கள் அனைவரும் இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம்’ என்று இந்து முன்னணி சார்பில் உத்தமபாளையத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, உத்தமபாளையம் காவல்துறையினர் இந்து முன்னணி பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாளையங்கோட்டை: இந்து முன்னணி போராட்டத்தால் 27 வீடுகள் இடிப்பு

’இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், இந்துக்கள் அனைவரும் இந்த தீபாவளி பண்டிகை முதல் இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம், நலிவடைந்து வரும் இந்து வியாபாரிகளை ஊக்குவிப்போம், அந்நிய பொருட்களைத் தவிர்ப்போம்’ என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தது.

உத்தமபாளையம் வடக்குத் தெரு, தேரடி, மெயின் பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 100 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கக்கூடிய உத்தமபாளையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இரவோடு இரவாக ஒட்டப்பட்டு சுவரொட்டிகள் அனைத்தையும் அப்புறப்படுத்தினர்.

அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதாக உத்தமபாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்செல்வா என்பவர் மீது உத்தமபாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்து முன்னணி பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பாஜகவின் முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தமபாளையத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டியில் என்ன தவறு. கிறிஸ்தவ அமைப்புக்கள் கிறித்தவர்கள் மட்டுமே மனு செய்ய வேண்டும் என விளம்பரம் செய்கின்றனர்.அவர்கள் மீது வழக்கு தொடராத காவல்துறை இந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக, இந்து முன்னணி பிரமுகர் ராம்செல்வாவிடம் பேசிய போது, ”இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு சுவரொட்டி ஒட்டப்பட்டன. காவல்துறையினர் அகற்றியதால் அடுத்ததாக வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “இந்தியா பன்முகத்தன்மை கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம். தரமான பொருட்கள் எங்கு கிடைக்கிறதோ, அங்கே வாங்கிடுவோம்.” என்று தெரிவித்துள்ளது.

, “பிரிவினையைத் தூண்டும் சக்திகளைப் புறக்கணிப்போம்.” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்