Aran Sei

பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினரான பாஜக துணைத் தலைவர்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் பி.கனகசபாபதி நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள கல்வி நிலையங்களில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளை வளர்க்கும் திட்டத்தோடு பா.ஜ.க அரசு செயல்படுவதாகவும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கிற மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது.
“1981-ல் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கென சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. அச்சட்டத்தில் பிரிவு 10-ன் அடிப்படையில் சிண்டிகேட் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்தாலும், துணை வேந்தருடன் கலந்தாலோசித்துதான் நியமிக்க வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை துணைவேந்தர் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மௌனமாக இருக்கிறார்” என்கிறார் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கா.அஷ்ரஃப்.
“கட்சி சார்புடைய நபரை எப்படி ஒரு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க முடியும்? நீட் தொடங்கி ஆளும் பா.ஜ.க அரசு மீது கல்வித்துறை சார்ந்து நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. போக சிண்டிகேட் உறுப்பினராக கனகசபாபபதி நியமிக்கப்பட்டிருப்பது  தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பார்வைக்குச் சென்றதா என்பது குறித்து எந்தத் தெளிவான அறிக்கையும் வெளியாகவில்லை.” என்கிறார்.
பல்கலைக்கழகம் சார்ந்து முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சிண்டிகேட் உறுப்பினர்களின் பங்கும் அடங்கியிருக்கிறது என்றும், அரசியல் கட்சி சார்புடைய ஒரு நபர் இப்பொறுப்பில் அமர்த்தப்படுகையில் அக்கட்சியின் நிலைப்பாட்டை சார்ந்தே அவரது நடவடிக்கை இருக்கும் என்றும் கூறுகிறார்.
“சிண்டிகேட் உறுப்பினர் என்கிற முக்கியமான ஒரு பொறுப்பை கல்வித்துறையில் நிபுணர்களாக விளங்குபவர்களுக்கு அளிக்கும்போதுதான் அது பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டினை மேம்படுத்த உதவுமே தவிர இது போன்ற கட்சி சார்புடைய நபரை நியமிப்பதில் எந்த நியாயமுமில்லை. எனவே ஆளுநர் இம்முடிவினைத் திரும்பப் பெற வேண்டும். துணை வேந்தர் இது குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும். கல்வித் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த நபரை சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை” என்கிறார் கா.அஷ்ரஃப்.
இது குறித்து சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் பி.கனகசபாபதியின் கருத்தை கேட்டறிவதற்காக அவரைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் கருத்து கூற மறுத்துவிட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்