Aran Sei

“அவர்கள் பேசட்டும். அவர்களே தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளட்டும்.” திருமாவளவன்

Credits The Quint

தொல் திருமாவளவன் இந்தியப் பெண்கள் ஒவ்வொருவரிடத்திலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மனுநூல் பெண்களை இழிவு செய்வதாக சமீபத்தில் நடந்த இணையவழி கருத்தரங்கில் கூறியிருந்தார்.

திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் பாஜகவில் இணைந்துள்ள நடிகை குஷ்புவின் தலைமையில் இன்று சிதம்பரத்தில் போராட்டம் நடைபெற இருந்தது.

போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், சிதம்பரம் செல்லும் வழியில், முட்டுக்காடிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “இது கட்சி ரீதியான போராட்டம் கிடையாது. நான் பாஜக சார்பாக பங்கேற்றிருந்தாலும் கூட, ஒரு பெண் என்ற முறையில்தான் நான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் தேவையில்லாத விஷயங்களைப் பேசியுள்ளார் எனவும், குறிப்பாக அவர் பெண்களை மிகவும் இழிவாக பேசியிருப்பதால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.

பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் மட்டுமே கடவுள் இருப்பார் என்றும் பெண்கள் இழிவுபடுத்தப்படும் இடத்தில் கடவுள் இருக்க மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான். கடவுள் இருக்காறா இல்லையா? திருமாவளவன் என்னதான் சொல்ல விரும்புகிறார்? தேர்தல் நேரத்தில் மட்டும் கோயில்களுக்கும் மசூதிகளுக்கும் சர்ச்சுகளுக்கும் செல்கிறார். எதற்காக  மக்களை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தொடர்ந்து, “3000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புத்தகத்தை இப்போது ஏன் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.” என்றும் பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தொல் திருமாவளவன் ட்விட்டரில், “அவர்கள் பேசட்டும். அவதூறுகளை அள்ளி ஆவேசமாய் வீசட்டும். அவர்களின் தரத்தை அனைவரும் அறியட்டும். அவர்களே தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளட்டும்.”

“நம் கவனம்- மனுநூலை அம்பலப்படுத்தும் மகத்தான பணியில் மட்டுமே குவியட்டும்.” என தொல்.திருமாவளவன் ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்