Aran Sei

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதில் பாஜகவிற்கு மறைமுகமாக உதவும் திமுக, அதிமுக – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனத்திற்கு பாஜக நேரடியாகவும், திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மறைமுகமாக உதவுகின்றன எனவும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை பரவலால் நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது, “ஆலை, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நான்கு மாத காலம் மட்டுமே இயங்கும்” என காவல்துறையினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், “மாவட்ட ஆட்சியிருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறோம். உங்கள் சந்தேகங்களை முழுவதுமாக கேட்டு தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்” என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 28) போராட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம்  வழங்கினர்.

அந்தக் கடிதத்தில், “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தூத்துக்குடி மக்களும், தமிழக மக்களும், களத்திலும் நீதிமன்றத்தில் போராடி, 15 பேர் தங்கள் இன்னுயிரை இழந்து நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர். தற்போது ஆக்சிஜன் உற்பத்தி என்றொரு  உண்மைக்கு மாறாக மீண்டும் ஆலையைத் திறக்கத் தமிழக அரசும், உச்சநீதிமன்றமும் முடிவு செய்துள்ளது” என குற்றம் சாட்டியுள்ளனர்.

“2018 ஆம் ஆண்டு ஒரே நாளில் 15 பேரை, கடந்து 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான உயிர்களையும் இழந்துள்ள எங்களுக்கு உயிரின் மதிப்பு நன்கு தெரியும். ஆனால் ஆக்சிஜன் தயாரிப்பை நாங்கள் எதிர்ப்பதாக தவறான தகவல் எங்களுக்கு எதிராக பரப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 26 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், “ஸ்டெர்லைட் ஆலையால் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாது. மேலும், அதிகபட்சமாக அவர்களால் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க முடியும், அதற்கான கட்டமைப்பை உருவாக்கவும் அவர்களுக்கு 9 மாதக் காலம் ஆகும்” என தெரிவித்துள்ளதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள போராட்டக் குழுவினர். ”இந்தத் தகவல் அனைத்து கட்சிக் கூட்டத்தில் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலை 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, தினமும் உற்பத்தி செய்து இலவசமாக வழங்கும் என்ற பொய் மட்டுமே திட்டமிட்டு கார்பரேட் ஊடகங்களால் தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்திலும் இதே பொய்யை வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.” என குற்றம் சாட்டியுள்ளனர்.

“சட்ட விரோத நிறுவனம் என தமிழக அரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட வேதாந்தா நிறுவனம் 10 முதல் 14 நாட்களில் தரவிருக்கும் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தான் இந்தியாவை காப்பாற்ற போகிறதா?. தூத்துக்குடியில் உள்ள மற்ற நிறுவனங்களாலேயே நாளென்றுக்கு 35 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தர முடியுமே?. டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் ஆலைகள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் மற்றும் வேதாந்தா நிறுவனங்கள், அந்த அலைகளில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர முன்வராதது ஏன்?.” என போராட்டக் குழுவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

”அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு களத்தில் மக்களுக்காக போராடிய கட்சிகள் மற்றும் இயக்கங்களை தமிழக அரசு அனுமதிக்காதது ஏன்?. நடைபெற்றது ஒரு கார்பரேட் ஆதரவு கூட்டம். அதனால் பல கட்சிகளை வேண்டுமென்றே கூட்டத்திற்கு அழைக்கவில்லை. சுற்றுச்சூழலை நாசமாக்கும் தாமிர ஆலையை முன்னேறிய நாடுகளே அனுமதிக்காத நிலையில், தூத்துக்குடியில் மீண்டும் திறக்கும் குறுக்கு வழியில் முயற்சிகள் நடக்கிறது. இதற்கு நேரடியாக பாஜகவும், மறைமுகமாக அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் உதவுகின்றன.” என போராட்டக் குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

“தூத்துக்குடி மக்களும், தமிழக மக்களும் ஒருபோது இச்சதியை ஏற்க மாட்டோம். எனவே மாநில அரசு, மீண்டும் ஒரு  பாரபட்சமற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து, உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசுக் கொள்கை முடிவெடுத்து, மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணத்திற்காகவும், எந்த நிலையிலும் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கக் கூடாது என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்