Aran Sei

பாஜக நடத்தும் ‘பிக் தாமரை’ நிகழ்ச்சி – வரிசைகட்டும் சினிமாகாரர்கள்

தமிழ் சினிமாவில் முன்பு பரபரப்பான ஸ்டார்களாக இருந்தவர்கள் மார்கெட் அவுட் ஆகி பழம்பெரும் நடிகர்களான பிறகு, வில்லனாக, ஹீரோ ஹீரோயினுக்கு அம்மா அப்பாவாக, மலேசியா மாமாவாக, சிங்கப்பூர் சித்தியாக வருவார்கள். சிலர் சீரியலில் ‘கண்ணம்மா’க்களுக்காக அழுதுகொண்டிருப்பார்கள். சிலர் பிரபல தொலைக்காட்சியின் ’நூறு நாள் வேலை திட்ட’ நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இதில் எந்த வாய்ப்புமே இல்லாமல் நொந்து போனவர்கள், ‘கமலாலயம்’ நோக்கிப் படையெடுக்கத்  தொடங்குகிறார்கள்.

கடந்த ஜூலை மூன்றாம் தேதி, பாஜக-வின் மாநில தலைவர் எல்.முருகன் தமிழகக் கட்சி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் மத்திய சென்னை கிழக்குப் பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமிதா நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்த நமிதா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் படிப்படியாக அதிமுக-வில் இருந்து விலகத் தொடங்கினார். பின் பாஜக-வில் இணைந்தார்.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பாஜக-வில் இணைந்த நடிகர் ராதாரவி, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும் ’8000 ஆயிரம் கோடி இந்திய மக்கள் தொகை’ புகழ் பொருளாதார நிபுணி மதுவந்தியும், முன்னாள் அதிமுக உறுப்பினர் நாட்டாமை புகழ் விஜயகுமார், நடிகை கௌதமி, நடிகை குட்டி பத்மினி, சீரியல் நடிகை ஜெயலட்சுமி போன்றோரும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் இருந்தனர்.

கலை மற்றும் கலாச்சாரப்  பிரிவு மாநிலப் பிரிவு தலைவர் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராமும், கலை மற்றும் கலாச்சாரப்  பிரிவு  மாநிலச் செயலாளர்கள்  ஒருகாலத்தில் இசையமைப்பாளராக இருந்த தீனா,  எல்லா ‘ஊரிலும்’ பெயர் சொல்லும் படங்களை இயக்கிய  இயக்குனர் பேரரசு, பெப்சி சிவா போன்றோரும் நியமிக்கப்பட்டனர்.

மாநில செயற்குழு அழைப்பாளர்களாக ஆர்.கே நகர் தொகுதியில் கங்கை அமரனும், இயக்குனர் கஸ்தூரி ராஜாவும் இழுத்துப்பிடித்து நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் போக நடிகர் பொன்னம்பலம், தேசியக் கொடியை அவமானம் செய்து சர்ச்சைக்கு உள்ளான நடிகரும் முன்னாள் அதிமுக மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வான எஸ்.வி.சேகரும் இதில் உள்ளனர்.

தாமரை மலராத விரக்தியில் பாஜக தொலைக்காட்சி தொடங்கப்போகிறதோ என்று மற்ற தொலைக்காட்சி ஓனர்கள் கொஞ்சம் பீதியடைந்துதான் போனார்கள். சிலர் மதுவந்தி போன்றோர்கள் இருப்பதால் இது கண்டிப்பாக யூட்யூப் சானலாகத்தான் இருக்கும் என்று நம்பவும் செய்தார்கள். அதற்கு முன்னோட்டமாக இந்தியாவில் உள்ள ‘8000 கோடி மக்களுக்கும்’ முகநூல் மூலமாக மதுவந்தி வீடியோக்கள் வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

கங்கை அமரன் இருப்பதால் கண்டிப்பாக இது பாட்டுப் போட்டியாகத்தான் இருக்கும் என்று கூவும் கோழி மீது சத்தியம் செய்து கரகாட்டம் ஆடினார்கள் இசைப் பிரியர்கள். பொன்னம்பலம் இருப்பதால் நாட்டாமை பார்ட் -2 எடுக்க இருப்பதாக, பொன்னம்பலம் ரசிகர் மன்றம், தாய்க் கிழவி வகையறா, டென்மார்க் கிளை உறுப்பினர்கள் போஸ்டர்கள் ஒட்டினார்கள். அதற்கு நாட்டாமை நாட்டார் வாழ்வியல் சங்கத்தின் விஜயகுமார் பண்பாட்டுப் பேரியக்கமும் அதரவு தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கெல்லாம் மேலாக விஜய் ரசிகர்களும் பேரரசு ஆர்மிக்காரர்களும், சிவகாசி, திருப்பாச்சி போல இது தென்காசி என்கிற படத்திற்கான குழு என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பத் தொடங்கினார்கள்.

காய்த்ரி ரகுராம், நமிதா போன்றோர் இருப்பதால், ‘பிக் தாமரை’ என்ற நிகழ்ச்சியாக இருக்கும் என்று ஊர்ப்புரங்களில் பேச்சு ஓடியது.

கடைசி வரை யாரும் அதைக் கட்சி என்றும், அவர்கள் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டியவர்கள் என்ற நினைவே அவர்களுக்கு வரவில்லை. முன்பு நடந்திருந்தால் ஞாபகம் வந்திருக்கும் என்று ஒரு குரலும் வராமல் இல்லை.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்