Aran Sei

’இருக்கு.. ஆனா இல்ல’- அதிமுக-பாஜக கூட்டணி

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள் மட்டும் தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கடந்த 7-ஆம் தேதி, அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனால், சில நாட்களாக அதிமுக-வில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது. அதன்பின் அதிமுக-வின் கூட்டணி கட்சிகளான பாஜக, தேமுதிக மற்றும் பாமக, அதிமுக-வின் முதல்வர் வேட்பாளரை ஏற்குமா என்ற கேள்வி எழுந்தது.

சில நாட்களுக்கு முன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் ‘‘அதிமுகவுடன் மக்களவை தேர்தலுக்காக கூட்டணி அமைத்தோம். சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக உடனோ இல்லை திமுக உடனோ கூட்டணி வைக்கலாம்.  பாஜக தலைமையிலோ கூட்டணி கூட அமையலாம்’’ என்றார்.

நன்றி : Twitter

அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோவில்பட்டி அருகே தெற்குக் கழுகுமலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பொன்.ராதாகிருஷ்ணன் பாஜகவின் தலைவர் இல்லை. பாஜகவும், தொகுதி மக்களும் அவரை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியில் இருப்பதாகத் தெரிகிறது. அவரது பேச்சைக் கருத்தில் கொள்ள வேண்டாம்.  கூட்டணி குறித்து பாஜக மேலிடம் தெரிவிக்க வேண்டும் அல்லது பாஜகவின் தலைவர் கூற வேண்டும். இங்கே பாஜக தலைவராக முருகன் உள்ளார். இந்தக் கூட்டணி தொடரும் என்று அவர் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.

அன்றே பாஜக மாநில தலைவர் முருகன், முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.

நன்றி : New Indian Express

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்  கே.பி.முனுசாமி ‘‘தேசியக் கட்சியோ, மாநிலக் கட்சியோ, நாங்கள் அறிவித்த முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள்தான் எங்களுடன் கூட்டணியில் இருக்க முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அதிமுக எந்த பிரச்சினையும் இல்லாமல் முதல்வரை  தேர்ந்தெடுதுள்ளனர்  அதிமுகவில் பிளவு ஏற்பட வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் சில கட்சிகள் எதிர்பார்த்தது போல் இல்லாமல் நடந்து இருக்கிறது” என்று கூறினார்.

“தமிழ்நாட்டில் எங்கள் தலைமையில் கூட்டணி இல்லை அதிமுக தலைமையில்தான் கூட்டணி உள்ளது. 2021 ஆம் ஆண்டு அரசு அமையும் போது அதில் அங்கம் வகிக்கும் கட்சியாக பாஜக நிச்சயம் இருக்கும். அதிமுக பாஜக  கூட்டணியில் எந்த குழப்பமும்  இல்லாமல் நாங்கள் இருக்கிறோம். கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவெடுக்கும்” என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக-வின் துணை தலைவர் அண்ணாமலை ”அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் ஒரே நேர்கோட்டில் பயணித்து வருகிறோம்.  சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யும் நேரம் இதுவல்ல. கட்சியின் தேசிய தலைமை தான் முடிவெடுக்கும்” என்று கூறியுள்ளார்.

அதிமுக-வின் உட்கட்சி பிரச்சனை முடிவடைந்த நிலையில், பாஜக-வுடனான கூட்டணி தொடர்பான தற்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்