Aran Sei

`இது பாஜகவின் வன்ம மனப்பான்மை’ – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

Credits: BBC

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டேன் சாமி உட்பட 8 பேர் மீது தேசியப் புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த 8 பேர் மீதான குற்றச்சாட்டுகளைப் பத்தாயிரம் பக்கங்கள் அடங்கிய துணைக் குற்றப்பத்திரிகையில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) விவரித்துள்ளது.

பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி (83), பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே (70), முன்னாள் பேராசிரியர் ஹனி பாபு (54), கெளதம் நவ்லாகா (67), கபீர் காலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த சாகர் கோர்கே (32), ரமேஷ் கோய்ச்சூர் (38), ஜோதி ஜக்தாப் (32) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிலிந்த் டெல்டும்டே தலைமறைவாக இருக்கிறார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது தேச துரோகம், குற்றவியல் சதி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்ஐஏ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் இயக்கத்துடன் இணைந்து, வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சாதி, மத கலவரத்தைத் தூண்டியதாகவும், மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்துகொண்டு அரசுக்கு எதிராகச் செயல்பட வேண்டி, சிந்தனையாளர்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார் என கெளதம் நவ்லாகா மீது என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது.

பேராசிரியர் ஆனந்த டெல்டும்டே மாவோயிஸ்ட் குழுவினருடன் சேர்ந்து அமைப்பின் செயல்பாடுகளுக்காக நிதி திரட்டியதாகக் குற்றம் சாட்டியுள்ள என்ஐஏ, மாவோயிஸ்ட்களுடன் இணைந்து செயல்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தலைமறைவாகி உள்ள மிலிந்த் டெல்டும்டே, குற்றம் சாட்டப்பட்டுள்ள பிறருக்கு ஆயுதப் பயிற்சி வழங்குவதற்கான முகாம்கள் ஏற்பாடு செய்ததாக என்ஐஏ குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் வியாழன் அன்று கைது செய்யப்பட்ட ஸ்டேன் சாமி, அக்டோபர் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 8 பேரும் மும்பை தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தி இந்து செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் மூத்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், “தலைமறைவாகாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ள 83 வயதான ஒருவரைக் கைது செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர் ராஜ்தீப் ட்விட்டரில், “வாழ்வு முழுவதும் பழங்குடி சமூக மக்கள் நலனுக்காக உழைத்துள்ள 83 வயதானவரை பீமா கோரேகான் வழக்கில் கைது செய்துள்ளார்கள் என்றால், இந்தியாவில் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் எல்லாருமே மாவோயிஸ்டுகளா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேகாலயா மாநில மக்களவை உறுப்பினர் வின்சண்ட் பாலா, ஸ்டேன் சாமியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Credits:Twitter

 

கிறிஸ்தவர்கள் எந்த முகாந்தரமும் இல்லாமல் தொடர்ந்து இலக்கு வைத்து குற்றம் சாட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், “ஏழை மக்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்காகக் குரல் கொடுத்துவரும் 83 வயது ஸ்டேன் சாமியைக் கைது செய்வதன் மூலம் மத்திய பாஜக என்ன சொல்ல நினைக்கிறது? இந்தக் குரல்களை ஒடுக்குவதில் ஏன் இவ்வளவு பிடிவாதம்?” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஸ்டேன் சாமியின் கைதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”உச்சநீதிமன்றம் விதித்துள்ள முறைமைகளுக்கு முரணாக ஸ்டேன் சாமியை கைது செய்துள்ள நிலையில் நடுக்குவாதம் என்னும் பார்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவரை மும்பைக்கு அழைத்துச் செல்ல முயல்வது அராஜகத்தின் உச்சம்.”

Credits: Simplicity

”ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பவர்களைப் பழிவாங்கும் மத்திய பாஜகவின் வன்ம மனப்பான்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“ஆதிவாசி மக்களின் நிலங்களைப் பிடுங்கி அவர்களை நிலமற்றவர்களாக மாற்றும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் நாதியற்ற அம்மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பாடுபட்ட பாதிரியார் ஸ்டேன் சாமி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்