Aran Sei

சிறப்பாக நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் : தமிழகம் இரண்டாம் இடம்

credits : the newindian express

இந்த ஆண்டிற்கான பொது விவகார அட்டவணையை (public affairs index 2020) வெளியிட்டது பொது விவகார மையம் (public affairs centre). அதில் இந்தியாவில் சிறப்பாக நிர்வகிக்கப்படும் பெரிய மாநிலங்களுக்கான பிரிவில் கேரளா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் உத்தரப்பிரதேசம் பிடித்ததுள்ளது.

இந்த அட்டவணையைத் தயாரித்தது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான அரசு சாரா அமைப்பு. இந்த ஆண்டிற்கான ஆய்வறிக்கையை வெளியிட்ட அமைப்பு மாநிலங்களின் நிலையான வளர்ச்சியை அடிப்படையாக வைத்தே அட்டவணை தயாரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

இந்தப் பட்டியலில் முதல் நான்கு இடங்களைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த மாநிலங்கள் பெற்றுள்ளன. கேரளா 1.388 புள்ளிகள், தமிழ்நாடு 0.912 புள்ளிகள், ஆந்திரப்பிரதேசம் 0.531 புள்ளிகள், கர்நாடகம் 0.468 புள்ளிகளோடு சிறப்பாக நிர்வகிக்கப்பட்ட மாநிலங்களின் பிரிவில் இந்த இடங்களைப் பெற்றுள்ளன. இந்த அட்டவணையில் கடைசிமூன்று இடங்களைப் பிடித்த மாநிலங்கள் பீகார் -1.158 ஒடிஷா -1.201 உத்திரபிரதேசம் 1.461.

சிறிய மாநிலங்களுக்கான பிரிவில் சிறப்பாக ஆளுகை செய்யப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தை 1.745 புள்ளிகளுடன் கோவா பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து மேகாலயா 0.797 மற்றும் ஹிமாசல பிரதேசம் 0.725 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இதில் கடைசி இடங்களைப் பிடித்த மாநிலங்கள் மணிப்பூர் -0.363, டெல்லி -0.289 உத்தரகாண்ட் -0.277 என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

யுனியன் பிரதேசங்களின் பிரிவில் 1.05 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது சண்டிகர். அதைத் தொடர்ந்து புதுச்சேரி 0.52 லக்‌ஷயதீப் 0.003 ஆகியன இடம்பெற்றுள்ளன. இந்தப் பிரிவில் கடைசி இடங்களைப் பிடித்தவை தாதர் & நாகர் ஹவேலி (-0.69) அந்தமான் ஜம்மு மற்றும் காஷ்மீர் (-0.50) மற்றும் நிக்கோபார் (—0.30).

அட்டவணையைத் தயாரிதது குறித்துப் பேசிய இந்த அமைப்பின் தலைவர் கஸ்தூரிரங்கன் ”இந்த ஆய்வு தரும் முடிவுகளை வைத்து இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அரண் செய்யிடம் பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் “தமிழகம் நிலையான முன்னேற்றப் பாதையில் செல்வதற்கான அடித்தளத்தையிட்டது திமுக.  பல்வேறு தொழிற்துறை நிறுவனங்கள், ஐடி தொழிற்சாலைகள், கார் தொழிற்சாலைகள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகியவை தொடங்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்” எனத் தெரிவித்தார்.

அதனுடைய பலனைத்தான் தற்போது அதிமுக அறுவடை செய்வதாகவும் கடந்த ஒன்பதாண்டுக்கால அதிமுக ஆட்சியில் நிலையான வளர்ச்சிக்கு வித்திடும் எந்த வேலையையும் இந்த அரசு செய்யவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், அவர் “தமிழகம் நிலையான வளர்ச்சியை அடைய அதிமுக அரசு `எதையும் உருப்படியாகச் செய்யவில்லை. பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்தும் பின் தங்கியிருப்பது அவர்களின் நிர்வாகத் திறனைக் காட்டுகிறது. மத்திய அரசு மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் இதே நிலைமையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படையாகக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்