Aran Sei

ஆறுமுகசாமி கமிஷன் – 9 வது முறையாக நீடிக்கப்பட்டுள்ள பதவிக்காலம்

Image Credits: New Indian Express

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 75 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 2016 டிசம்பரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது மரணம் குறித்து விசாரிக்கத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனை 2017-ம் ஆண்டு ஆகஸ்டில் அமைத்தார்.

விசாரணை ஆணையம் தனது விசாரணையின் ஒரு பகுதியாக மருத்துவ நிபுணர்கள், மருத்துவ ஊழியர்கள், அமைச்சர்கள் மற்றும் மாநில சுகாதாரச் செயலாளர் உட்பட நூற்றுக்கணக்கானவர்களிடம் விசாரணையை நடத்தியது.

லண்டனைச் சேர்ந்த மருத்துவர் ரிச்சர்ட் பேல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதில் நெருக்கமாக ஈடுபட்டதால், 2019-ம் ஆண்டு விசாரணையில் ஆஜராகக் கோரி அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

2019-ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை விசாரணைக்குத் தடையாக இருப்பதாக ஆறுமுகசாமி கமிஷன் குற்றம்சாட்டியது. கமிஷனுக்கு அறிக்கைகள் மற்றும் ஆவணங்களில் உள்ள மருத்துவச் சொற்களையும் மருத்துவர்களால் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் தன்மையையும் புரிந்துகொள்ளும் நிபுணத்துவம் இல்லை என்று மருத்துவமனை கூறியது. ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி அப்பல்லோ மருத்துவமனை ஒரு வழக்கையும் தொடர்ந்தது.

எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் இன்று முடிவடைகிறது. எனவே, ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு இந்த மாதம் 17-ம் தேதி அரசுக்கு கமிஷன் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியது.

முன்னாள் முதல்வரின் மரணம் குறித்த விசாரணையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர, சதியை வெளிக்கொண்டுவரத் தயாராக இல்லை என்பதையே இது அம்பலப்படுத்துகிறது என நீட்டிப்பு குறித்து ஏற்கெனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருந்தார்.

இதுவரை 8 முறை பதவிக்காலம் நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது 9ஆவது முறையாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்