Aran Sei

அரியலூர் மாணவர் தற்கொலை. “நீட் பலிபீடத்தில் மேலும் ஓர் உயிரிழப்பு” – மு.க.ஸ்டாலின் 

ரியலூர் அருகே நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்து  கொண்டதையடுத்து அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.7 லட்சமும், தி.மு.க சார்பில் ரூ.5 லட்சமும் நிதி உதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்காவுக்குட்பட்ட இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ். இவர் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த நிலையில் செப். 9ம் தேதி அவரது வீட்டுக்கு அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக உட்பட தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் மாணவர் விக்னேஷ் மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “நீட் பலி பீடத்தில் இன்னுமோர் உயிரிழப்பு” என்று கூறியுள்ளார்.

“இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும்?” என்றும் எத்தகைய சோதனையையும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாணவர் விக்னேஷுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விக்னேஷின் குடும்பத்துக்கு தி.மு.க சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி செப் 10ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர் விக்னேஷின் தற்கொலை செய்தி அறிந்து தான் துயரடைந்ததாகவும், விக்னேஷின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாயும், விக்னேஷின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் பேசியபோது “நீட் தேர்வின் விளைவாக இது போன்ற மாணவர் தற்கொலைகள் பெரிய அவலம். மருத்துவக் கல்வி இடங்களை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் உள்ள முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். நூறு சதவிகித இடங்களுக்கும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். பொதுவாகவே  மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட வேண்டும். வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதால்தான் பலரும் மருத்துவ படிப்பைத் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். பொதுவாகவே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும்” என்கிறார்.

“நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு விலக்கு பெற வேண்டும். 2019ல் கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணைச் சட்டத்தை திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்த தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். அச்சட்டத் திருத்தத்தின் மூலம் மாநில அரசுகள் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும்.” என்கிறார் ரவீந்திரநாத்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்