Aran Sei

`கழினியில் இறங்கிய மாட்டைப் போல, மக்களை அடித்துத் துரத்துகிறார்கள்’-இயக்குனர் கோபி நயினார்

கூவம் ஆற்றங்கரையோரமான காந்தி நகர்ப் பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கும் பணி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னைத் தீவுத்திடல் அருகில், கூவம் ஆற்றங்கரையோரத்தில் உள்ளது காந்தி நகர். இங்கு ஏராளமான மக்கள் குடிசை வீடுகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் கூவம் ஆற்றங்கரையோரத்தை ஆக்கிரமிப்பு செய்ததாகவும், உடனே அந்த இடங்களை விட்டுக் காலி செய்யவும், பொதுப்பணித்துறை சார்பில் 2019 ஆம் ஆண்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

“ஒரு பக்கம் போராட்டம் செய்கிறோம்; மறுபக்கம் எங்கள் வீடுகளை இடிக்கிறார்கள்” – கூவம்கரை மக்கள்

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்குக் குடிசை மாற்று வாரியத்தின் கீழ், பொதுப்பணித்துறை சார்பில், அங்கிங்கிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாக்கத்தில் 2092 வீடுகள் ஒதுக்கப்பட்டன.

அதில், முதற்கட்டமாக 1700 குடும்பங்கள் அங்கு மறுகுடியமர்த்துதல் செய்யப்பட்டன. மீதமுள்ள 346 குடும்பங்கள் கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் மாற்றப்படாமல் இருந்தன.

நேற்று முன்தினம் (டிசம்பர் 9), அப்பகுதிக்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்குள்ள வீடுகளை ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு இடிக்கத் தொடங்கினர்.

விருந்தின் போது நண்பர்களின் தட்டில் சாப்பிட ஆசை – தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, அந்தப் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டருக்குள் வீடுகளை ஒதுக்கக்கோரியும், பெரும்பாக்கத்திற்குச் சென்றால் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பாதிக்கப்படும் என்று கூறியும், மதியம் 1 மணி அளவில் கூவம் ஆற்றில் இறங்கி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி : The New Indian Express

மாலை ஆறுமணியளவில், காவல்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பின், அவர்கள் மேலே ஏறிவந்தனர்.

“அதிமுக அரசுக்குத் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – திருமாவளவன்

நேற்றும் (டிசம்பர் 10), வீடுகளை இடிக்கும் பணிகள், அப்பகுதி மக்களின் எதிர்ப்புகளையும் மீறி நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதைத் தடுக்க வந்த மக்களை, தங்கள் தடிகளால் அப்புறப்படுத்தினர்.

அதனையடுத்த, போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா உட்பட அவரது கட்சியினரையும், இயக்குனர் கோபி நாயினார் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

நன்றி : The New Indian Express

வீடுகளை இழந்த பலர், தங்கள் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கும் இடையிலும், உடைந்து போன வீட்டுப் பொருட்களுக்கும் இடையிலும் அமர்ந்து, தங்கள் குடும்பத்தோடு இரவுப் பொழுதைக் கழித்தனர்.

 

இந்நிலையில் இன்று (டிசம்பர் 11) மீண்டும், காலை வந்த காவல்துறையினரும் பொதுப் பணித்துறையினரும் வீடுகளை இடிக்கத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதைத் தடுக்க வந்த மக்களை, மீண்டும் தங்கள் தடிகளால் அப்புறப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறையினரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பகுதி மக்களுக்கு சென்னைக்குள்ளேயே வீடுகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து, இப்பிரச்சனை குறித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் அரண்செய் பேசிய போது, ”இந்தப் பகுதிக்குப் பக்கத்திலேயே கே.பி.பார்கிலும் ராம்தாஸ் நகரிலும் கூடுதலாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் முறைகேடாக வீடு வாங்கியுள்ளார்கள். பலர் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

”போன வருடம், நாங்கள் தலைமைச் செயலாளரிடம் பேசும் போது விருப்பம் உள்ளவர்கள் மட்டும் போகலாம் என்றார். ஆனால், இப்போது வந்து வழுக்கட்டாயமாக இடித்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

 

”300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். காவல்துறையின் ஜீப்புகள் தவிர்த்து, 9 பேருந்துகளில் காவல்துறையினர் வந்திருந்தார்கள். இவர்கள் எல்லாம் எதற்கு அங்கு உள்ளார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “பொதுப்பணித் துறை அதிகாரி கவிதா போராட்டம் செய்தவர்கள் தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால்தான், அவர்களுக்குப் பெரும்பாக்கத்தில் குடியேற வீட்டு டோக்கன் தருவேன் என்று அந்த மக்களை மிரட்டினார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

நேற்று (டிசம்பர் 9) போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட இயக்குனர் கோபி நயனாரிடம் அரண்செய் பேசிய போது, ”ஒரு பழங்குடி சமூகத்திடம் இருக்கும் ஒரு தேக்க நிலை, இந்தப் பகுதி மக்களிடமும் இருக்கிறது. இவர்களுக்கு உழைக்க மட்டும்தான் தெரியும். கூவம் கரையோரும் ஒருவர் குடியேறினாலே, அவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தலித்தான். அப்படிதான் அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறை தாக்கியதாகவும், “கழனியில் மாடு இறங்கினால், நாங்கள் கம்பால் அடித்துத் துரத்துவோம். மாடுகள் வாலைத் தூக்கிக்கொண்டு, அலறியபடி ஓடும். அந்தக் காட்சிதான் இங்கு நடந்தது. மக்களை அப்படிதான் அடித்துத் துரத்தினார்கள். ஒரு விலங்கை மனிதன் துரத்துவான். மனிதனை ஒரு மனிதன் துரத்துவானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்