Aran Sei

`எப்போது வரும் அந்த்யோதயா ரயில்?’ – பயணிகளின் பண்டிகைக்கால ஏக்கம்

சென்னை தாம்பரம் – நாகர்கோவில் இடையே முன்பதிவற்ற பயணிகள் ரயிலான அந்த்யோதயாவை இயக்கப் பயணிகள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து நெல்லை வரை செல்லும் சிறப்பு ரயில் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் 14 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் ஒரு பெட்டிக்கு 100 இருக்கைகள் என 1400 பயணிகள்வரை பயணிக்கும் வசதிகொண்டது. மேலும்,  பயோ டாய்லெட், குடிநீர் வசதி, செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, தீயணைக்கும் கருவிகள் எனப் பல வசதிகளைக்கொண்டுள்ளது.

முதலில் நெல்லைவரை விடப்பட்ட அந்த்யோதயா 2019 – ல் நாகர்கோவில்வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் மதியம் 1 மணிக்கு நெல்லை சென்றடையும். மாலை 5.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், அத்தியாவசியத் தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. அதில் முன்பதிவற்ற ரயில்பெட்டிகள் இல்லாதது ஏழை எளிய மக்களை மிகுந்த சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கிவருவதால் முழுவதும் முன்பதிவற்ற அந்த்யோதயா ரயிலை மீண்டும் விடவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் “கொரோனா தொற்றால் உலகமே பொருளாதாரச் சிக்கலில் தவித்துவருகிறது. இந்நிலையில் சாமானிய மக்களால் சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம் செலுத்திப் பயணிக்கமுடியவில்லை. பல மாதங்களாக வேலை வாய்ப்பில்லாமல் வாழ்க்கையே திண்டாட்டமாக இருக்கிறாது. எனவே, சிறப்பு ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளையும் இணைத்து சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய அனுமதித்தால் சிரமமின்றி வெளியூர் செல்லமுடியும்” என்கின்றனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்