பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்கள் மாநில அரசால் நிறைவேற்றப்பட உள்ளன.
வேளாண் விளைபொருள் மற்றும் வர்த்தகச் சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய வேளாண் தொடர்பான சட்டங்கள் நடப்பாண்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள், காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முதலமைச்சர் அமரிந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசு, வேளாண் தொடர்பாக மாநில உரிமைகளைக் காப்பாற்ற வேண்டி, மத்திய அரசின் இந்தச் சட்டங்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.
Passage of the our 4 Bills today is truly a victory of Punjab. I am happy that all parties came together & supported our Bills for protecting farmers against Anti-Farmer Laws passed by the Centre. I stand committed to my farmers and will not let anyone destroy their livelihoods. pic.twitter.com/qiMiNWEIXA
— Capt.Amarinder Singh (@capt_amarinder) October 20, 2020
பஞ்சாபைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் மத்திய அரசின் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் இந்தப் புது வேளாண் சட்டங்களை நிறைவேற்ற சிறப்புச் சட்டமன்ற அமர்வு அக்டோபர் 27, 28 தேதிகளில் நடத்தப்படும் என்று கூறியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில வேளாண் துறை அமைச்சர் ரவீந்திர சௌபே இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்துள்ள பேட்டியில், மத்திய அரசின் வேளாண் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் சத்தீஸ்கர் மக்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதால், சிறப்பு அமர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட், “பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்கள் இயற்றப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
आज पंजाब की कांग्रेस सरकार ने इन कानूनों के विरुद्ध बिल पारित किये हैं और राजस्थान भी शीघ्र ऐसा ही करेगा।
— Ashok Gehlot (@ashokgehlot51) October 20, 2020
மேலும், “சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுடன் உறுதியாக துணை நிற்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எங்கள் கட்சி தொடர்ந்து எதிர்க்கும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழக அரசும் உடனடியாகச் சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “மத்திய வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயம் சம்பந்தப்பட்ட மாநில உரிமைகளையும் விவசாயிகள் பெற்றுவந்த குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும் பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் கொண்டுவந்துள்ள மசோதாக்களைப் போல தமிழக அரசும் உடனடியாக சிறப்புச் சட்டப்பேரவையைக் கூட்டி நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கோரியுள்ளார்.
“இதைச் செய்யவில்லை என்றால் மத்திய பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் தமிழக விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்ட பழியை அதிமுக அரசு சுமக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறேன்”. என்று கே.எஸ் அழகிரி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.