Aran Sei

‘வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு’ – அய்யாக்கண்ணு

agriculture law credits : the business line

செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை தாக்கல் செய்திருந்தது.

மாநிலங்களவையில் செப்டம்பர் 20-ம் தேதி இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு வந்தன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஓட்டெடுப்பு நடத்தக் கோரியும், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ், குரல் வாக்கெடுப்பு நடத்தி, மசோதாக்களை நிறைவேற்றியதாக அறிவித்தார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து சட்ட அந்தஸ்து வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

 

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள திருத்த சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி

“இந்தச் சட்டங்கள் நாட்டின் பெண்கள், தொழிலாளார்கள் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் உதவும். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே சிலர் திருத்தச் சட்டங்களை எதிர்ப்பதை காண முடிகிறது.” என்றார்.

“இனி விவசாயிகள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். விவசாயிகளின் உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்துவதை இவர்கள் எதிர்க்கிறார்கள்.” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், “விவசாயிகள் அவர்களுடைய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து சந்தைப்படுத்துவதை அந்தச்சிலர் விரும்பவில்லை. இடைத்தரகர்கள் மூலம் லாபம் ஈட்டுவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. விவசாயிகளின் சுதந்திரத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

நாடெங்கும் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மத்திய அரசு இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக  சட்டங்களை முன் மொழிந்திருக்கிறார்.

இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றால் எதற்காக அவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்? பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு விவசாயியும் எதற்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் தினம் இந்த மூன்று கருப்புச் சட்டங்களும் கசக்கிக் குப்பையில் வீசப்படும்” எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்  பினோய் விஸ்வம், ராஷ்டிரீய ஜனதாதளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்குமார் ஜா, வக்கீல் மனோகர் லால் சர்மா, சத்தீஷ்கார் கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் உள்ளிட்டோர்  ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்