Aran Sei

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி. வழிகாட்டுதல் குழுவில் பெண்களுக்கு இடமில்லை

திமுக-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக அக்கட்சிக்குள் நிலவியது.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று (அக்.7) அறிவிக்கப்படும் என கூறினார்.

வழிகாட்டுதல் குழு

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை முதலே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தில் குவியத்தொடங்கினர். இருவருக்கும் ஆதரவான முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையகத்திற்கு வந்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி, 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார்.

அதன்படி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன்,  தங்கமணி, எஸ்பி வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி.பிரபாகரன், முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன், கோபால கிருஷ்ணன், மாணிக்கம் ஆகியோர் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

முதல்வர் வேட்பாளர்

இதைத் தொடர்ந்து பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வரக்கூடிய தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது “அதிமுக-வின் முதல்வர் வேட்பாளராக சகோதரர் பழனிசாமியை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இதன் மூலம் எங்கள் ஒற்றுமையை உடைக்க நினைத்தவர்களின் கனவு பலிக்காமல் போனது” என்றார். பின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.

நன்றி : Twitter

இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் தலைமை அலுவலகத்துக்கு வெளியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள அதிமுக தொண்டர்கள் கட்சி அலுவலகங்கள் முன்பும், பொது இடங்களிலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழிகாட்டுதல் குழுவில் ஒருவரான அமைச்சர் ஜெயக்குமார், “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இன்று பொன்னான நாள். அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் எதிர்பார்த்த அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மகிழ்ச்சியான ஒருமித்த கருத்து எட்டப்பட்டு நல்ல முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது” என கூறினார்.

“பிரச்சினைகள் வராதா அதில் குளிர்காயலாம் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போடுகின்ற வகையில் ஏகோபித்த உணர்வுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். எதிரிகள், துரோகிகள் புறமுதுகை காட்டி ஓடும் வகையில் புதிய புறநானூற்றை அதிமுக படைக்கும். 2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம்” என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

ஒரு பெண் கூட இல்லை

பதினோரு பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் லட்சுமி சுப்ரமணியன் “இரண்டு தசாப்தங்களாக ஒரு சக்தி வாய்ந்த பெண்ணின் தலைமையில் செயல்பட்ட அதிமுக கட்சியின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் ஒரு பெண் கூட இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்

இன்றைய முதல்வர் வேட்பாளர் அறிவிப்பின் மூலம், கடந்த சில நாட்களாக அதிமுகவில் நிலவி வந்த சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்