Aran Sei

`நாவை அடக்கிப் பேசுங்கள்’ – பாஜகவிற்கு ஆதித்தமிழர் பேரவை எச்சரிக்கை

credits : bbc

“எல்லாப் பெண்களுமே விபச்சாரிகள்தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும் பொருந்தும் அடிநிலையில் கிடக்கிற இதர பெண்களுக்கும் பொருந்தும் “ என்று மனுதர்மம் கூறுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர் வலதுசாரிகள்.

“மனுதர்மம் பெண்களைக் கொச்சைப்படுத்துகிறது என்னும் அர்த்தத்தில் நான் பேசியதை அரசியல் ஆதாயம் தேடுகிற சாதிவெறிபிடித்த, மதவெறிபிடித்த கும்பல் திட்டமிட்டு எனக்கெதிரான பொய்ப்பரப்புரைகளையும் அவதூறுகளையும் பரப்பி வருகிறார்கள்“ என்று இந்தப் பிரச்சனை குறித்து பதிலளித்தார் திருமாவளவன்.

இந்த விவகாரம் பூதாகாரம் அடைந்ததைத் தொடர்ந்து இந்துத்துவவாதிகளுக்கு எதிராக  தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்றிய பேரூர்களிலும் நகரங்களிலும் மனுதர்மத்தை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அவர் சென்னையில் நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தார்.

இதையடுத்து பாஜகவைச் சார்ந்த அஸ்வத்தமன் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை கலகம் விளைவிக்கும் கருத்தை வெளியிடுதல், மதம், இனம் சார்ந்து வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை உருவாக்குதல், மத உணர்வைப் புண்படுத்தும் நோக்கில் சொற்களைச் சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் திருமாவளவன் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் திருமாவளவன் மீது பதிவு செய்த வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  “வருணாசிரம – மனுஸ்மிருதி பெயரால் மறுக்கப்பட்ட பெண்ணுரிமையைச் சுட்டிக்காட்டி தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏற்படுத்திய விழிப்புணர்வின் பின்னணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியுள்ளார்.

அதைத் திரித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி மதவெறியைத் தூண்டுகிறவர்களை விட்டுவிட்டு, திருமாவளவன் அவர்கள் மீதே வழக்குத் தொடர்ந்திருக்கும் எடப்பாடி அதிமுக அரசின் காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது! உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! என்று கூறியிருந்தார்.

நவம்பர் 6-ம் தேதி‌ முதல் துவங்க‌வுள்ள ஆறுபடை வீடு வெற்றிவேல் யாத்திரை வெற்றி பெறவேண்டி கமலாலயத்தில் நடைபெற்ற “காப்பு கட்டுதல்” விழாவில் கலந்துகொண்டார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன். அந்த விழாவில் பேசிய அவர் “தொன்றுத்தொட்டு நமது சகோதரிகளை நமது தாய்மார்களை தெய்வமாக வழிபடுவது தான் நம்முடைய மரபு, நம்முடைய பாராம்பரியம் நம்முடைய வழக்கம். அதனால்தான் நம் ஊர்களில் மாரியம்மன் காளியம்மன் என அம்மன்களாகவே வழிபடுகிறோம். நாம் தெய்வமாக வழிபடும் சகோதரிகளுக்கு இழிவுப்படுத்தியவர்களுக்குத் தக்கப் பாடத்தைப் புகட்டியே ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திருமாவளவன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலினின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசிய எல்.முருகன் ”ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு எங்களுடைய தாய்மார்கள் எங்கள் சகோதரிகள் தக்க நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வெளியில் செல்ல முடியாது நடமாட முடியாது. தமிழகப் பெண்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் கடவுளுக்கும் எதிரி தாய்மார்களுக்கும் எதிரி உங்கள் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நடக்காது“ என்று கூறியுள்ளார்.

பாஜக தலைவர் எல்.முருகன் பேசியதைக் கண்டித்து ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”திமுக தலைவர் தளபதி அவர்களைப் பார்த்து ’ஸ்டாலின் வெளியே நடமாட முடியாது’ என்று சீண்டிப்பார்க்கும் எல்.முருகன் அவர்களுக்கு,

“தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு ”

தனி சுடுகாடு, தனிக்குவளை என்று சொல்லி ஊர் தனி, சேரி தனி என்று நம் முன்னோர்களைப் பிரித்து வைத்து “வெளியே நடமாட முடியாமல் தடுத்தது” இந்து மனு(அ)தர்மம் தானே மனிதர்களை மனிதனாக மதிக்காத இந்தக் கொடுமைகளை எல்லாம் சரி செய்வதற்காகத்தானே உருவாக்கப்பட்டது தாழ்த்தப்பட்டோர் ஆணையம்.

தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையத்தில் இது போன்ற ஆயிரக்கணக்கான கொடுமைகள் நாள்தோறும் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்கொடுமைகளுக்கு எல்லாம் காரணம் “மனு அதர்மம்” தானே,

அப்படி தெரிந்திருக்கவில்லை என்றால் ஒரு ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து கொண்டு “சட்டமேதை அம்பேத்கர்” அவர்கள் வகுத்த பட்டியல் சமூகப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக மக்களுக்குச் செயலாற்றி உள்ளீர்கள் என்பதையே உங்கள் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கின்றது.

தலித் மக்கள் வெளியே நடமாட முடியாத படி கொடுமைகள் இந்து மனு ஸ்ருமிதியின் படியே அரங்கேறுகிறது என்பதை செய்திகள் மூலம் அம்பலப்படுகின்றது.

ஆனால் தமிழகத்தின் நிலைமை அப்படியில்லை அம்பேத்கர் இயற்றிய சட்டத்தோடு பார்ப்பனியத்திற்கு எதிராக தந்தை பெரியாரின் ஏறத்தாழ 80 ஆண்டுகாலப் பணியின் காரணமாகத்தான் “நாமெல்லாம் சுயமரியாதையுடன் நடமாட முடிகிறது” என்பதை எல்.முருகன் உணரவேண்டும்

மனித மாண்பைக் குழிதோண்டிப் புதைக்கும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காகத் தொழிலாளர் வாரியம் அமைத்தது.

அறுபதாண்டுக் காலத்தில் சமூகக்கல்வி வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் முன்னேறாத அருந்ததியர் சமூகத்திற்கு மூன்று விழுக்காடு உள்ளிட்ட ஒதுக்கீடு கொடுத்து இன்றைக்கு முன்னேற்றம் தந்தது திராவிட முன்னேற்றக் கழகம்.

கக்கத்தில் வைத்த துண்டு கழுத்துக்கு வந்திருக்கிறது

குனிந்த நாம் நிமிர்ந்து நின்று இருக்கிறோம்,

எழுதக் கூடாது படிக்கக் கூடாது என்ற நிலைமை மாறி இன்றைக்குப் பொறியாளர்களாக, மருத்துவர்களாக, நீதிபதிகளாக, மாவட்ட ஆட்சியராக, அமைச்சர்களாக, சபாநாயகராக மாறி இருக்கிறோம், என்று சொன்னால் அதற்குக் காரணம் தந்தை பெரியாரின் பணியும் திராவிட இயக்கமும்தான் என்பதை முருகன் அறிந்திருந்தும் அறியாதது போல் நடிப்பது ஏன் என்பது தமிழக மக்கள் அறிவார்கள்.

நிறைவாகப் பார்ப்பனியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களைப் பேச வைத்த, நடக்க வைத்த, படிக்க வைத்த மனிதர்களாக நடமாட வைத்த திராவிட மண்ணில் இருந்து சொல்லிக் கொள்கிறோம்.

“நாவை அடக்கிக்கொண்டு” அறம் சார்ந்த அரசியலில் ஈடுபடுங்கள் இல்லையேல், வரும் காலத்தில் தமிழக மக்கள் உங்களையும், சங்பரிவாரக் குழுக்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அடிமை அரசையும் தமிழக மண்ணில் இருந்து அப்புறப்படுத்துகின்ற நாள் வெகுதொலைவில் இல்லை.

மேலும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுகிற எல்.முருகன் அவர்களுக்கு ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்களின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு இரா.அதியமான்அறிக்கையில் கூறியுள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்