Aran Sei

7.5 % இடஒதுக்கீடு – ‘ஆளுநருக்கு மேலும் அவகாசம் தேவையா?’ – நீதிமன்றம் கேள்வி

Image Credits: The News Minute

7.5% உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததால் சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் 5 அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்தனர். அமைச்சர்களின் சந்திப்பிற்கு பின்பும் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனிடையே, மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும், முத்துக்குமார் மருத்துவ இடங்களில் 7.5% இடதுக்கீட்டை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தலைமை வழக்கறிஞர், “இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 5 அமைச்சர்கள் ஆளுநரைச் சந்தித்தனர். தலைமை செயலருடன் 5 அமைச்சர்களும் அனைத்து கோணங்களிலும் ஆலோசித்துள்ளனர். ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரக் கால அவகாசம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், “சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டும். பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் அவகாசம் தேவையா?” என்று  கேள்வியெழுப்பியுள்ளார்.

“நீதிபதிகள் பலர் இடஒதுக்கீடு அடிப்படையில் பணியில் சேர்ந்திருப்பதாகத் தரமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. அது தொடர்பாக அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அது போலக் கருத்து தெரிவிப்பவர்களுக்கு நீதிமன்றம் கண்டம் தெரிவிக்கிறது,” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

“மக்களால் தேர்வுச் செய்யப்பட்டவர்கள் இணைந்து இந்த மசோதாவை உருவாக்கியிருக்கிறார்கள். இதில், கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட சூழலில் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டும்,” என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கு அரசுத் தலைமை வழக்கறிஞர், “இது போன்ற முடிவுகளில், நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப் போதுமான அளவு கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என விதிகள் உள்ளன,” என்று வாதிட்டார்.

அதற்குப் பதிலளித்த நீதிபதிகள், “அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டும். ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடுவை விதிக்கவோ இயலாது என்பது நீதிமன்றம் அறிந்த ஒன்றுதான். ஆனால் ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்வதும் அவசியமானது,” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிற மாநிலங்களில் நீட் தேர்வு முடிவு வெளியான பின்னர் என்ன நிலை உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில், “கர்நாடகாவில் மாநிலங்களில் இது போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இந்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, “இந்த விவகாரத்தில் நவம்பர் 2-ம் தேதிக்குள்  நல்ல முடிவு எட்டப்படும்,” என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

“அரசியலமைப்பை இயற்றியவர்கள், அரசியலமைப்புப் பொறுப்பில் இருப்பவர்கள் பதில் அளிக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டார்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் விதிகளை வகுத்துள்ளனர்,” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

“கர்நாடகாவில் கிராமப் புற மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கென்று தனியாக எதுவும் வழங்கப்படவில்லை. ஆகையால், இந்த வழக்கில் முடிவெடுக்கக் கால அவகாசம் வழங்க வேண்டும்,” என்று தமிழக அரசுத் தலைமை வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

“ஏழை மாணவர்களின் நலன் கருதி அசாதாரணச் சூழலில், நீதி மன்றம் உரிய முடிவு எடுக்கலாம் என்ற நிலையும் உள்ளது. இந்த மசோதா சட்டமானால், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் 300 பேர் பயனடைவர். இதற்காகத்தான், நீதிமன்றம் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது,” என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்