Aran Sei

சசிகலாவின் 2,000 கோடி சொத்துகள் – வருமான வரித்துறை முடக்கம்

பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரது பெயர்களில் உள்ள 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை  முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஏற்கனவே சசிகலா மற்றும் அவரது பினாமிகள் பெயரில் இருந்த ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

சசிகலாவுக்குச் சொந்தமான சிறுதாவூர் பங்களா, கொடநாடு பங்களா உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சொத்துகள் முடக்கம் தொடர்பான நோட்டீஸைச் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒட்டி வருகின்றனர்.

`2017-ம் ஆண்டு ‘ஆபரேஷன் க்ளீன் மணி’ என்கிற பெயரில் வருமான வரித்துறையினர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 187 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில் 2016 நவம்பர் 8-ம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்புக்குப் பிறகும் நிறைய சொத்துகள் வாங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சோதனை முடிவில் சசிகலா மற்றும் அவரது உறவினர், பினாமி ஆகியோரது பெயர்களில் வாங்கப்பட்டுள்ள ரூ.1600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன’ இவ்வாறு புதியதலைமுறை இணையதள செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் போயஸ் தோட்டம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பங்களா உட்பட சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியிருந்த நிலையில் மீண்டும் இந்நடவடிக்கை தொடர்ந்திருக்கிறது.

1997-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு பேரும் குற்றவாளிகள் எனப் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உட்பட நான்கு பேரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு பெங்களூரு உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கு மீண்டும் 2017ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதற்கிடையில் 2016ம் ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளென பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் நடைமுறைப்படுத்தியது.

இதனால் மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அடுத்த ஆண்டு தண்டனைக்காலம் முடிந்து வெளிவரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்