Aran Sei

பாஜகவின் பெரியார் குளறுபடி – சுட்டும் துக்ளக்

Credits:dailyhunt.in

பாரதிய ஜனதா கட்சி பெரியாரைக் கலந்து குளறுபடி செய்யாமல் இருப்பது கட்சிக்கும் தேசியத்துக்கும் நல்லது எனத் துக்ளக் இதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாதம் வெளியாகியுள்ள துக்ளக் இதழின் கேள்வி பதில் பகுதியில், “திடீரென்று தமிழக பாஜக பெரியாரைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறதே?” என்ற கேள்விக்கு இதழ் இவ்வாறு பதிலளித்துள்ளது.

”ஈவெரா-வை ஏற்றுக்கொண்டால், கழகங்களின் வாக்குகள் பெருமளவு தங்களுக்கு மாறி, 60 இடங்களைப் பெற்று விடுவோம் என்று பாஜக நினைப்பது போலிருக்கிறது” என்றும் இதழில் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்ட பாஜக தலைவர் எல்.முருகன் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

பெரியாரின் 142-வது பிறந்தநாளான அன்று அவர், “பெரியார் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பெரியாருக்கு வாழ்த்துச் சொல்வதில் எங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் கிடையாது” எனக் கூறியிருந்தார்.

திருச்சி அருகே செப்டம்பர் 26-ம் தேதி நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டது. இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

“பெரியார் பிறந்தநாள் அன்றுதான் தமிழக பிஜேபி தலைவர் முருகன், ‘சமூகநீதிக்காக பாடுபட்ட பெரியாரை வாழ்த்துவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை’ என்றார்.  இதுதான் அவர்கள் பெரியாருக்குக் காட்டும் மரியாதையா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

எம்.பி கனிமொழிக்குப் பதிலளிக்கும் வகையில் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “ஈ.வெ.ரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.”

“இந்த அநாகரீகச் செயலை யார் செய்திருந்தாலும் அவர்களைக் காவல் துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அதிமுக கட்சியைச் சேர்ந்த மீன்வளம், பணியாளர் மற்றம் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அரண்செய்-க்கு அளித்திருந்த பேட்டியில்;

“பெரியாரை அவமதிக்கும் ஈனத்தனமான செயலை யார் செய்தாலும் அது மிகப்பெரிய குற்றம். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். அந்த ஈனத்தனமாகச் செயலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்“ என்று கூறியுள்ளார்.

மேலும் “சமத்துவம், பெண்ணுரிமை, சாமானியனும் கூட அரசியல் மற்றும் அனைத்துத் தளங்களிலும் உயர்ந்து நிற்பதற்கு சமூகநீதி கண்டவர் தந்தை பெரியார். அவரை இழிவுப்படுத்தும் எந்தச் செயலையும் அதிமுக எந்த நிலையிலும் அனுமதிக்காது. அப்படிச் செய்தால் அவர்கள் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை” எனவும் கூறியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்