Aran Sei

தமிழக கோயில்களை மீட்க வேண்டும் – ஜக்கிக்கு ஆதரவாக களமிறங்கிய நகைச்சுவை நடிகர் சந்தானம்

”கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது” என்று குரல் எழுப்பியுள்ள ஜக்கி வாசுதேவிற்கு, திரைப்பட நடிகர் சந்தானம் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விவசாயத்தையும் விவசாயகளையும் காப்பதற்காக ‘காவேரி கூக்குரல்’ எனும் இயக்கத்தை முன்னெடுத்த ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தற்போது கோயில்களை மீட்கும் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, ஜக்கி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியிலுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம் கெடுக்கப்படுகிறது. ஆலயங்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது, அதிகாரிகளாலும் அரசியல் சக்திகளாலும் அல்ல” என்று பதிவிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து, ”கோயில்கள் அரசின் பிடியில் இருக்க அல்ல. ஜாதி, இன பாலின பாகுபாடு கடந்து, மனிதருக்கு அவை வழங்கும் வளர்ச்சிக்கான சாத்தியத்தை தக்கவைக்கவே அமைக்கப்பட்டுள்ளன. மறுக்கமுடியாத இந்த சிறப்புரிமையை தடைசெய்வது, மனிதருக்கு இழைக்கும் பெருங்குற்றம்” என்றும் ஜக்கி ட்விட் செய்திருந்தார்.

உழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா?: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்

கோயில்களை மீட்பது தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய ஜக்கி வாசுதேவ், ”பக்தர்களின் வருகையால் தான் கோயில்கள் இயங்குகின்றன. அரசாங்கம் விளம்பரம் செய்வதால் அல்ல. தற்போது, பெரும்பாலான கோயில்கள், ஒரு பக்தர் கூட செல்ல விரும்பாத வகையில் நிர்வகிக்கப்பட்டுள்ளன” எனவும் ”அரசு அதிகாரத்திலிருந்து கோயில்களை விடுவிக்கும் கட்சிக்கே தனது வாக்கு” எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் ”தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள், அவற்றின் பராமரிப்புக்கான வருவாயின்றி இருக்கின்றன. கோயில்களை சமூகத்திடம் ஒப்படைத்தால், பக்தர்கள் அவை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வார்கள் – வருவாய் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி” என்று கூறினார்.

‘பக்தர்கள் கையில் கோவில்’ என்பது ஜக்கியின் கருத்தல்ல, பாஜக கருத்து – கொளத்தூர் மணி

இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டு செல்வத்தை திருடியதோடு, கோவில்களை கையகப்படுத்தியதால், நம் ஆன்மீகத்தையும் அடக்கி ஒடுக்கினர்” என்றும் “அரசாங்கம் கோவில்களை நிர்வகிக்க வேண்டுமென்றால், அவர்கள் தாங்கள் செய்வது மக்களாட்சி அல்ல, இறையாட்சி என அறிவிக்க வேண்டும்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் ”11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நகைச்சுவை நடிகர் சந்தானம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சத்குருவின் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன். (கோயில்களை) பக்தர்களிடம் விட்டுவிடுங்கள். ஒரு வேளைகூட பூஜை செய்யப்படாமல் பல்வேறு கோயில்கள் உள்ளன, அதை காண்பதற்கே வருத்தமாக உள்ளது. கோயில்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் குறைந்தபட்ச வேலை தான் செய்யப்பட்டுள்ளது. #தமிழககோயில்களைவிடுவியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்