Aran Sei

சிஏஏ, எட்டு வழிச்சாலை, கூடங்குளம் எதிராக போராடிய மக்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட்டது–அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

குடியுரிமைத் திருத்தச் சட்டம், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் அணுவுலை, நியூட்ரினோ திட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது பதியப்பட்ட 5570 வழக்குகளை திரும்ப பெறப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜூலை 24 ஆம் தேதி, ஆளுநருக்கு உரைக்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனக் கூறியிருந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் (2011 – 2021 ) ஊடக சுதந்திரத்துக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு மற்றும் வேளாண் சட்டங்கள், கூடங்குளம், நியூட்ரினோ, குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, எட்டு வழிச்சாலை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் பரிந்துரைகளின் அடிப்படையில், திரும்ப பெறும் வழக்குகளுக்கான பட்டியலைத் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அளித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் தலைமை செயலாளர் பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையின் நகல் தமிழநாடு காவல்துறை தலைமை இயக்குநர், உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர், முதலமைச்சர் அலுவலகம், சட்டத்துறை அமைச்சரின் சிறப்பு தனி உதவியாளர், தலைமை செயலாளரின் தனிச் செயலாளர், கூடுதல் தலைமை செயலாளரின் தனிச் செயலாளர் (உள்துறை), சட்ட ஒழுங்குத்துறை, சட்டத்துறை ஆகியவற்றுக்கு அனுப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்